தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை – பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கொரோனா விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. எல்லா இடத்திலும் இதே பேச்சு தான். கேரளா, ஒரிசா மாநிலங்களில் சட்டசபை கூட்டத்தை தள்ளிவைத்திருக்கிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்கள். வேலூரில் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து 300 பேர் வருகிறார்கள்.

கேரளாவிலிருந்தும் வருகிறார்கள். நாம் உயிரை கையில் படித்துக் கொண்டு இருக்கிறோம். ரெயிலில் போர்வை இல்லை என்று கூறிவிட்டார்கள். எத்தனை தடவை தான் கையை கழுவுவது. பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒன்று உயிரை விட வேண்டும். அல்லது அரசு தான் எங்களை காப்பாற்ற வேண்டும். அறிக்கைகளை விட்டு காப்பாற்றுவதோடு விட்டுவிடாதீர்கள். எல்லோரையும் காப்பாற்றுங்கள்
என்று பேசினார்.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படுகிறது. வெளியில் செல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரும் பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை.

அரசு காப்பாற்றும் என்று அரசு மீது நம்பிக்கை வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலமைச்சர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து உயர் அதிகாரிகளையும் அழைத்து சுமார் 1 மணி நேரம் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார்கள்.

ரூ.60 கோடி நிதியை ஒதுக்கி இருக்கிறார். அந்த பணத்தையும் உடனடியாக விடுவித்து இருக்கிறார். வேலூர், கேரளா பற்றி எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். எனவே தான் மாநில எல்லையில் உள்ள மால்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை மூட முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். தேவையற்ற இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்தோம். மத்திய அரசின் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லியிருக்கிறதோ, அதனை சிறப்பாக செய்திருக்கிறோம் என்றும் சிறப்பான கண்காணிப்பை நடத்தி் வருகிறோம் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் பாராட்டி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மஸ்கட்டிலிருந்து வந்த என்ஜினீயர் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு இருந்தது. அவரும் உரிய சிகிச்சை பெற்று  டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார். புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு பேசினார்.