தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் இருப்பார் – எதிர்க்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

சென்னை

சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் இருப்பார் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கடந்த 14-ந்தேதி இஸ்லாமிய சமுதாய பிரதிநிதிகளை அழைத்து தலைமைச் செயலாளர் நடத்திய ஆலோசனைக் கூட்டம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அவைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்து பேசியதாவது:-

குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிற கூட்டமைப்புகளை சேர்ந்த 49 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை கடந்த 14-ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம், ஆகியவை குறித்து கருத்துக்களை தெரிவித்தார்கள். சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற விவாதத்தையொட்டியும் அவர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றின் நிலை குறித்தும், மாநில அரசு அதன் அதிகார வரம்புக்குட்பட்டு எடுத்து வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் தெளிவு படுத்தியிருக்கிறார். அனைத்து இயக்கத் தலைவர்கள், இஸ்லாமியத் தலைவர்கள் திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சரை சந்தித்தார்கள். அவர்கள் அப்போது தெரிவித்த அந்த கருத்துக்களையும் அந்த சந்திப்பின் போது சட்டமன்றத்திலே முதலமைச்சர் இதுகுறித்து விவாதித்திருக்கிற கருத்துக்களையும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தினார்.

அது குறித்த விவரங்களையும் 1 மணி நேரம் அவர்களோடு விளக்கமாக அந்த கருத்தை சொன்னார்கள். தேனி மாவட்டத்தில் துணை முதலமைச்சர், புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரும் அனைத்து இஸ்லாமிய சமுதாயத்தினரையும் அழைத்து பேசினார்கள். இதனுடைய நோக்கம் என்னவென்று சொன்னால், உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இந்த துறைக்கு பொறுப்பேற்றிருக்கின்ற உள்துறை அமைச்சர் தெளிவாக சொல்லிவிட்டார். மீண்டும் சொல்கிறோம். சிறுபான்மையின மக்கள் எங்கள் உறவு. எங்கள் ரத்தம். இது உங்கள் தேசம். நீங்கள் இந்த நாட்டினுடைய மக்கள். இந்த நாட்டினுடைய பிள்ளைகள். அச்சப்பட தேவையில்லை. அம்மாவின் அரசில் முதலமைச்சர் உறுதியாக உங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பார்.

12.3.2020 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சியை சேர்ந்த கபில்சிபல் உள்பட பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்கும்போது, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு சம்பந்தமாக எந்த ஒரு ஆவணமும் கேட்கப்படுவதில்லை, பொதுமக்களிடம் கேட்கப்படும் விவரங்கள் இல்லையெனில் அதற்கான பதில் அளிக்க தேவையில்லை. டி டவுட்புல் என்ற பிரிவு என்.பி.ஆரில் இடம்பெறாது. எனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற மத்திய உள்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அந்த விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஆவணங்களை கேட்பார்கள் என்று சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆவணங்கள் கேட்கப்பட மாட்டாது என்று உள்துறை அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும், ஆவணங்கள் கேட்கப்படவில்லை. இதிலும் தேவையில். தகவல் இல்லையென்றால் என்ன செய்வது என்று கேட்டீர்கள். தகவல் அளிப்பது உங்கள் விருப்பம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சொன்னார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் யாதொரு ஆவணமும் கேட்கப்படுவதில்லை. கேட்கப்படும் விவரங்கள் இல்லையெனில் அதை அளிக்க வேண்டாம். டி பிரிவு இடம் பெறாது. நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. டி பிரிவில் எதையும் சேர்க்க மாட்டோம் என்பதை தெளிவாக கூறி விடுங்கள் என்பதயும் அவர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே இதுகுறித்து சிறுபான்மை இன மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்ற அந்த அச்சத்தை குறைக்கின்ற வகையிலும், பதற்றத்தை தணிக்கின்ற வகையிலும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுகின்ற வகையிலும் டெல்லியில் நடைபெற்றது போன்ற சம்பவங்களை கொண்டு தமிழகத்தில் அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் காப்பாற்றுகின்ற நோக்கத்தில் முதலமைச்சரின் அறிவுரையோடு தலைமைச் செயலாளர் கூட்டத்தை நடத்தினார்.

அனைத்து கட்சிகளையும் கூட்டி முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தியிருக்கலாம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சொல்லியிருக்கிறார். இது ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வழக்கில் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சட்டமன்றத்திலும், இங்கிருக்கக்கூடிய அனைத்துக் கட்சி தலைவர்களும் இதைத்தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய போதும், பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்ற போதும், அச்சத்தைத் தெரிவிக்கின்ற போதும், இதுவரையில் இல்லாத வகையில் தெளிவான கருத்தை சிறுபான்மை இன மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று முதலமைச்சர் ஆணித்தரமாக உறுதியாக 30 ஆண்டுகள் எப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்ததோ, அதே நிலைதான் தொடரும். அச்சப்படத் தேவையில்லையென்று இந்த சட்டமன்றப் பேரவையிலும் தெளிவாக சொல்லியிருக்கிறார். இது உணர்வு பூர்வமான பிரச்சினை. இதுகுறித்து மக்கள் அச்சத்தில் இருக்கக் கூடாது என்கிற அடிப்படையில் தான் முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு முயறசிகளை எடுத்து வருகிறார்.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகுக்கும் சட்டத் திருத்தமாகும் என்பதையும், அதனால் இந்தியக் குடிமக்கள் எவருக்கும் இந்த சட்டத் திருத்தத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது என்பதையும் தலைமைச் செயலாளர் கூறி இருக்கிறார். குடியுரிமை விதிகள் 2003-ன் கீழ் 2010ம் ஆண்டு முதன்முதலாக தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிப்பதற்கான கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெற்றது. இது புதிதாக நடைபெறவில்லை என்பதை தலைமைச் செயலாளர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

2010ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் 2015ம் ஆண்டில் இதனை மேம்படுத்துவதற்கு முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த விதியின் அடிப்படையில் தான் தேவையானவற்றை சேர்க்கலாம். தேவையானவற்றை நீக்கலலாம் என்பதன் அடிப்படையில் தான் இந்த மூன்று புதிய அம்சங்கள் எவையென்று அவையில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் அறிவார்கள். இந்த மூன்று புதிய அம்சங்களை குறிப்பிட்டு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.