சிறப்பு செய்திகள்

அம்மாவின் அரசு தொடர வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் விருப்பம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

சென்னை

திட்டங்களை செயல்படுத்துவதில் அம்மா அரசு மகத்தான சாதனை படைத்து வருகிறது. அம்மாவின் அரசு தொடர வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் விருப்பம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பதிலுரை வருமாறு:-

“முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி !”என்று விவசாயிகளின் பெருமைகளைப் பாடினார் புரட்சித்தலைவர்.

உலகுக்கே உணவளிக்கும், உன்னத தொழில் செய்யும், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து, வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் வகையில், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, விவசாயியாக இருந்து முதலமைச்சரான, “காவிரிக் காப்பாளன்”, முதலமைச்சர் எடப்பாடியார், குடிமராமத்து என்னும் மாபெரும் திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சிறுபாசன ஏரிகள், குளங்கள், ஊருணிகள் போன்ற, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் எடப்பாடியார், கடந்த ஆண்டு தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் – குடிமராமத்து என்ற மக்கள் இயக்கத்தை, தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின்கீழ் முதலமைச்சர் எடப்பாடியாரின் தலைமையிலான அரசு, 2019-20ஆம் ஆண்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 5,000 சிறுபாசன ஏரிகளும், 25,000 குளங்கள் மற்றும் ஊருணிகள் போன்ற, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, 1,250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, நீர் நிலைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும், முதலமைச்சர் எடப்பாடியார், மாநில அரசு நிதியாக, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், மேற்படி நீர் நிலைகளில் உள்ள மதகுகள், நீராடும் துறை, சிறு குளம், கழிமுகம் ஆகிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள, நரேகா திட்ட நிதியில், 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா பூங்கா 

அம்மா அவர்களின் அரசு, 2016-17ஆம் ஆண்டில், ஊரகப் பகுதிகளில் நகரப் பகுதிகளுக்கு இணையாக, அதிக அளவு மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில், சுமார் 15,000 முதல் 20,000 சதுர அடி பரப்பளவில், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய, 500 அம்மா பூங்காக்கள், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.

அம்மா உடற்பயிற்சி கூடம்

அம்மா அவர்களின் அரசு, 2016-17ஆம் ஆண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும், இளைஞர்களின் உடல் திறன் மற்றும் மனவளத்தை மேம்படுத்த, அம்மா பூங்காக்களில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில், 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டன.

பசுமை வீடுகள் திட்டம்

கலசம் இல்லாத கோவில் இல்லை
தாளம் இல்லாத ராகம் இல்லை
மரம் இல்லாத காடு இல்லை
மீன் இல்லாத கடல் இல்லை
மீசை இல்லாத பாரதி இல்லை
வானம் இல்லாத நிலவு இல்லை
வாசல் இல்லாத வீடு இல்லை

ஆனால், தங்கி வாழ்வதற்கு வீடுகள் இல்லை என்று கவலைப்பட்ட ஏழை, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 2011-12ஆம் ஆண்டில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், 2011-12ஆம் ஆண்டு முதல் 2015-2016 ஆம் ஆண்டு வரை, 5,940 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அலகு தொகையில், 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு, 2016-17ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் 20,000 பசுமை வீடுகள் கட்ட, 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டிலும், 20,000 பசுமை வீடுகள் கட்ட, 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுது பார்த்தல் திட்டம்

முதலமைச்சர் எடப்பாடியார், 12.6.2018 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு, பழுதடைந்த 45,594 வீடுகள், 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சீரமைக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்)

“கைத்தொழில் வேலை செய்யும் ஏழை
கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும்”
என்று பாடினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

அந்த பொற்காலத்தை உருவாக்க, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2011-12ஆம் ஆண்டு முதல், 2015-16ஆம் ஆண்டு வரையிலான, 5 ஆண்டுகளில், மொத்தம் 4,41,637 வீடுகள், 4,875 கோடியே 718 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இதில், மாநில அரசின் பங்குத் தொகை 3,010 கோடியே 65 லட்சம் ரூபாய் ஆகும்.

இத்திட்டம் 2016-17ஆம் ஆண்டு முதல், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் என சீரமைக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கான பரப்பளவு, 210 சதுர அடியிலிருந்து, 269 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அலகுத் தொகையான 1,20,000 ரூபாயில், வீடு ஒன்றுக்கு மத்திய அரசு தனது பங்காக 72,000 ரூபாய் மட்டும் வழங்குகிறது.

மாநில அரசின் பங்காக 48,000 ரூபாய் வழங்குவதுடன், கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக, கூடுதலாக 50,000 ரூபாய் வழங்கி, தமிழ்நாட்டில் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையை 1,70,000 ரூபாயாக நிர்ணயம் செய்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து, 90 மனித சக்தி நாட்கள் வழங்குவதால், ஒரு வீட்டிற்கு 20,610 ரூபாய் வழங்கியும், கழிப்பறை கட்ட 12,000 ரூபாய் வழங்கியும், ஒரு வீட்டினை மொத்தம் 2,02,610 ரூபாய் மதிப்பில் கட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2016-17ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை, 8,968 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில், 5,27,552 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் மாநில அரசின் பங்குத்தொகை மட்டும் 5,170 கோடியே 1 லட்சம் ரூபாய் ஆகும்.

இத்திட்டத்திற்கு, சமூகபொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011-ன் அடிப்படையில், கிராம சபை மூலம், பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர். ஆனால் பல தகுதிவாய்ந்த குடும்பங்கள் மற்றும் பயனாளிகளின் பெயர்கள், இச்சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெறாததால், அவர்களையும் இப்பட்டியலில் சேர்த்திட, அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, 9 இலட்சத்து 11 ஆயிரம் தகுதியுள்ள பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும், அனைத்து பயனாளிகளுக்கும் வீடு வழங்கிட, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

“உழைக்கும் கைகளே, உருவாக்கும் கைகளே,
உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே”, என்றும்
“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே”,
என்றும் புரட்சித்தலைவர் அவர்கள், உழைப்பின் மேன்மையைப் போற்றிப் பாடினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில், 2011-12ஆம் ஆண்டு முதல், 2015-16ஆம் ஆண்டு வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 173.81 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, 20,597 கோடியே 76 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு, 2016-17ஆம் ஆண்டு முதலான 4 ஆண்டு காலத்தில், 111.56 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, 19,210 கோடியே 48 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இயற்கை வள மேலாண்மை பணிகளின் கீழ், தடுப்பணை அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், மண்வரப்பு மற்றும் கல் வரப்பு ஏற்படுத்துதல், கிணறு வெட்டுதல், மீள் நிரப்பு தண்டு மற்றும் மீள் நிரப்பு குழி அமைத்தல், தனி நபர் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழி அமைத்தல், சீரான அகழிகள் அமைத்தல் போன்ற பணிகள் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு, நிலத்தடி நீர் மீள நிரப்பப்பட்டு, மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீர் வளம் பாதுகாக்கப்படுகிறது.

நீடித்த மற்றும் நிலையான சொத்துக்களை உருவாக்குவதில், தமிழ்நாடு தொடர்ந்து முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இயற்கை வள மேலாண்மை பணிகளுடன், அங்கன்வாடி மையங்கள், சுய உதவிக்குழு கட்டடங்கள், மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கழிப்பறைகள், ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஊரக இணைப்பு சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 2018-19ஆம் ஆண்டில், பணிகளை முடித்ததில் சிறந்த செயல்பாடு, நீர் வள மேலாண்மை பணிகளை செயற்படுத்துவதில் சிறந்த செயல்பாடு ஆகியவற்றிற்காக, தமிழ்நாட்டிற்கு தேசிய அளவிலான 2 மாநில விருதுகள், 4 மாவட்ட விருதுகள், 1 ஊராட்சி ஒன்றிய விருது, மற்றும் 1 ஊராட்சி விருது என மொத்தம் 8 தேசிய அளவிலான விருதுகள், மத்திய அரசால் 19.12.2019 அன்று புதுடில்லியில் வழங்கப்பட்டது என்பதை, பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாலைகள் 

“கல்விக்குச் சாலையுண்டு
ஊருக்குப் பாதையுண்டு,
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் காணலாம்”

என்று புரட்சித் தலைவர் அவர்கள் பாடியதற்கேற்ப, அம்மா அவர்களின் அரசு, ஊரகப் பகுதிகளில், கடந்த 9 ஆண்டு காலத்தில், 90 ஆயிரத்து 273 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளின் மேம்பாட்டிற்காக, 20,153 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில், ஊரக சாலைகளின் மேம்பாட்டிற்காக, ‘தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டம், 2015-16ஆம் ஆண்டில் முதன் முறையாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடியார், ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளித்து, 2018-19ஆம் ஆண்டு முதல், இத்திட்டத்திற்கான நிதியுதவியை, 1,200 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்.இத்திட்டத்தின் கீழ், இதுவரை 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 23 ஆயிரத்து 352 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள், மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, நபார்டு வங்கி நிதி உதவியுடன், கடந்த 9 ஆண்டுகளில், 7 ஆயிரத்து 985 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள், 2,251 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடியார், ஊரகப் பகுதிகளில் முதன்முறையாக, 1 கிலோ மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட, சிறிய இணைப்பு சாலைகள் மேம்பாட்டிற்கு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றார். அதன்படி, 2018-19-ஆம் ஆண்டு முதல், தற்போது வரை 3 ஆயிரத்து 564 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த, 825 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக, கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் இதுவரை, இத்திட்டத்தின் கீழ், 4,257 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 9 ஆயிரத்து 293 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, முதன்முறையாக மாநில அரசு நிதியிலிருந்து, அம்மாவின் அரசு, 1,344 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-1 மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-11 ஆகிய திட்டங்களை, மிகச் சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால், தமிழ்நாடு, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-111-க்கு தகுதி பெற்றுள்ளது. குக்கிராமங்களிலிருந்து சந்தை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மற்றும் மருத்துவமனைகளை இணைக்கும் பிரதான சாலைகள், மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 7,375 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகளை மேம்படுத்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக, தொடர்ந்து 3 ஆண்டுகளாக, அதாவது 2016-17, 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில், 131 கோடியே 4 லட்சம் ரூபாயை, தமிழகத்திற்கு ஊக்கத் தொகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. அம்மாவின் அரசு, இத்தொகைக்கு ஈடாக, 87 கோடியே 35 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.

அம்மா அவர்களின் அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக, கடந்த 9 ஆண்டுகளில், 7,025 கோடி ரூபாய் மதிப்பில், 29 ஆயிரத்து 910 கிலோ மீட்டர் நீளமுள்ள தாரிடப்படாத சாலைகள், தார்ச் சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், மிகவும் சேதமடைந்த தார்ச் சாலைகள், பயன்பாட்டுக் காலம் முடிவடையும் நிலையிலுள்ள சாலைகள், மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட 42 ஆயிரத்து 254 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை, 11,165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா-ஆதி திராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்

ஆதி திராவிடர் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், அவர்களது சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காகவும், அம்மா ஆதி திராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தை, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அரசு, 2018-19ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, செயல்படுத்தி வருகிறது.

முழு சுகாதார தமிழகம் தூய்மை பாரத இயக்கம் (கிராமின்)

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில், 2013ஆம் ஆண்டு சுகாதார அடிப்படைக் கணக்கெடுப்பின்படி, 51.06 இலட்சம் குடும்பங்களில் கழிப்பறை வசதி இல்லை என கண்டறியப்பட்டது. அம்மா அவர்களின் அரசு, தற்போது அனைத்து குடும்பங்களுக்கும், தனிநபர் இல்லக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரம் அடைந்த நிலை, 45 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள, 12,525 கிராம ஊராட்சிகளும், தாமாகவே முன் வந்து, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராம ஊராட்சிகளாக, கிராம சபைக் கூட்டத்தில், சுயமாக அறிவிப்பு செய்துள்ளன.அனைத்து ஊரக மாவட்டங்களும், 100 விழுக்காடு சுகாதாரம் அடைந்த நிலையை எட்டியுள்ள.

2018-19ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டு சுகாதார கணக்கெடுப்பில் விடுபட்டுப்போன, கழிப்பறை இல்லாத 6.08 இலட்சம் குடும்பங்களுக்கு, தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ், கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள், மற்றும் பிற குடியிருப்புகளில், கழிப்பறை கட்ட போதிய இடம் இல்லாது இருப்பின், அந்த குடியிருப்புகளில் சமூக சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை, மறுசுழற்சி மற்றும் குப்பைக்கூளங்கள் வெளியேற்றும் வசதிகளுடன் கூடிய, திடக்கழிவு அமைப்புகளுடன் செயல்படுத்திட, விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக 2,000 கிராம ஊராட்சிகளில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, இத்திட்டம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7,000 கிராம ஊராட்சிகளிலும், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீதமுள்ள 3,524 கிராம ஊராட்சிகளிலும், விரிவுபடுத்தப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம், வெளி ஆதார முறையில், 66,130 துhய்மைக் காவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளான, குப்பைத் தொட்டிகள், மூன்றுச் சக்கர மிதிவண்டிகள், மற்றும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

நகர்ப்புரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள், மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள, கிராம ஊராட்சிகளின் சிறப்புத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, மின்கலம் பொருத்திய தள்ளுவண்டிகள், மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும், 66,130 துhய்மைக் காவலர்களுக்கு, ஊதியம் வழங்க 2018-19ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் 206 கோடியே 4 லட்சம் ரூபாய், மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

“நதியைப்போல நாமும் நடந்து பயன்தர வேண்டும்
கடலைப்போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்”
என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பொன்வரிகளுக்கு ஏற்ப, பரந்த இதயம் கொண்ட, முதலமைச்சர் எடப்பாடியார், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை, 2 கோடியே 50 இலட்சம் ரூபாயிலிருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டார். அதனடிப்படையில், 2019-20 ஆம் ஆண்டு முதல், நிதி உயர்த்தி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், இத்திட்டத்தின் கீழ் பணிகளை விரைந்து தேர்வு செய்யும் வகையில், 2019-20ஆம் ஆண்டில், நிதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள், அரசாணையாக வெளியிடப்பட்டு, நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கழிப்பறைகள் பராமரித்தல், வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்துதல்

“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி”

என்று மாணவ, மாணவியர்களைப் போற்றிப் பாடுவார் புரட்சித் தலைவர் அவர்கள். மாணவர்கள் அனைவரும் வசதியாகவும். முழுமையான ஈடுபாட்டுடனும் கல்வி பயில, பள்ளிக்கூடங்கள் நல்லமுறையில், சுகாதாரமுறையில் இருப்பது அவசியமாகும். ஊரகப் பகுதிகளிலுள்ள 29,623 ஊராட்சி ஒன்றிய, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 4,575 அரசு பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரின் நலனை முன்னிட்டு, தனித்தனியே கழிப்பிட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதை உறுதி செய்ய, அம்மா அவர்களின் அரசு, தக்க நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.

இப்பள்ளிகளின் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பதற்காக, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு, அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமாக, வெளி ஆதார முறையில் ஈடுபடுத்தப்படும் சுகாதார பணியாளர்களுக்கு, மாத ஊதியம் வழங்குவதற்கும், தூய்மைப்படுத்த தேவையான பொருட்களை வாங்குவதற்கும், அம்மா அவர்களின் அரசு, 2015-16 ஆம் ஆண்டு முதல், 267 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்
“தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்”
என்று பள்ளிகள் குறித்து புரட்சித்தலைவர் அவர்கள் பாடினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில், 2011-12 முதல் 2016-17 வரை ஆண்டு வரை, கிராமப் புறங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 587 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில், 54,015 புதிய பணிகள், மற்றும் பழுதுநீக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

2019-20ஆம் ஆண்டில், முதலமைச்சர் எடப்பாடியாரால், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஜல்ஜீவன் மிஷன்

2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குழாய் இணைப்புகள் மூலம், போதுமான அளவு தரமான குடிநீர் தொடர்ந்து வழங்குவதற்காக, பாரதப் பிரதமர், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராமப்புற குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் பொருட்டு, ஒரு செயல் திட்டத்தை அம்மா அவர்களின் அரசு வடிவமைத்து வருகிறது.

ஊராட்சி நிர்வாகம்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், 2011-12 ஆம் ஆண்டு முதல், 2015-16 ஆம் ஆண்டு வரை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாநில நிதி ஆணைய மானியமாக, 22,278 கோடியே 44 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உள்ளாட்சியில் நல்லாட்சி இதுவே மாண்புமிகு அம்மாவின் ஆசி பெற்ற, முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சிக்கு சாட்சி என்பதற்கேற்ப, 2016-17ஆம் ஆண்டு முதல், 2019-20ஆம் ஆண்டு வரை, மாநில நிதி ஆணைய மானியமாக, 22,302 கோடியே 64 லட்சம் ரூபாய் ஒதுக்கிடு செய்து சாதனை படைத்துள்ளது.

2019-20ஆம் ஆண்டில், மாநில நிதி ஆணைய ஒதுக்கீடாக, 6,573 கோடியே 60 இலட்சம் ரூபாய், மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 5,311 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மான்யத் தொகை, கிராம ஊராட்சிகளுக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து, 7 லட்சம் ரூபாயாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு 30 லட்சம் ரூபாயிலிருந்து, 40 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க, 5வது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, 2019-20 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் செயல்படும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, ஒரே அலுவலக கட்டடத்தில் கொண்டு வருவதற்காக, கடந்த 3 ஆண்டுகளில், 14 மாவட்டங்களில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகங்கள் கட்ட, 91 கோடியே 91 லட்சம் ரூபாய், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா அவர்களின் அரசு, கடந்த 9 ஆண்டுகளில், பழைய பழுதடைந்த கட்டடங்களுக்கு பதிலாக, 119 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் கட்ட, 266 கோடியே 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், 3 புதிய மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டடங்கள் கட்ட, 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பணியமைப்பு

ஊரக வளர்ச்சித் திட்டங்களின் திறமையான, மற்றும் சீரான நிர்வாகத்தை உறுதிப்படுத்திடும் பொருட்டு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முதல், கீழ் நிலை பணியிடங்கள் வரை, 6,914 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலமும், 7,934 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்பட்டுள்ளன.

பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 909 நபர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம், மற்றும் 986 ஊராட்சி செயலர்களுக்கு, 20 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், இளநிலை உதவியாளர் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஊதியம், ரூ.15,900-50,400 என்ற நிலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும், மகளிர் ஊராட்சி செயலர்களுக்கு, 180 நாட்களாக இருந்த மகப்பேறு கால விடுப்பு, 270 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளில் மூன்று ஆண்டுகள் பணிமுடித்து, தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய 26,404 துப்புரவு பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது என்பதை, பெரு மகிழ்ச்சியுடன் இப்பேரவையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

“ஜீவ நதியாய் வருவாள்
மக்கள் தாகம் தீர்த்தே மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்,
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்” என்று

தாய்க்குலத்தின் சிறப்பை,
பெண்ணினத்தின் பெருமையை போற்றிப் பாடினார்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

இறைவனின் படைப்புகளில்,
மிக உயர்வான படைப்பு பெண்தான்.
பெண் இனத்தின் பேரரசியான
புரட்சித்தலைவி அம்மா,

பெண்களின் உறுதியையும், திறமையையும் தட்டி எழுப்பி,சொந்தக் காலில் அவர்கள் நிற்கும் வகையில்,மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்துத் தந்து, அவர்களது வாழ்வில் எழுச்சியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தினார்.

தமிழக மகளிரின் வாழ்வாதார மேம்பாடு, சுயசார்பு, வறுமை ஒழிப்பு, சமூகப் பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றை, முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைத்துத் தந்த, மகளிர் சுய உதவிக்குழுக்கள், தற்போது ஆல்போல் தழைத்து, 6 இலட்சத்து 96 ஆயிரம் குழுக்களாகப் பெருகி, 1 கோடியே 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு, சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.

இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள், 8,921 கோடி ரூபாயை மொத்த சேமிப்பாகக் கொண்டுள்ளன. அம்மா அவர்களது அரசின் பொற்கால ஆட்சியில், கடந்த 9 ஆண்டுகளில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 65,930 கோடி ரூபாய் வங்கிக்கடனாக வழங்கப்பட்டு, மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சியில், கடந்த ஆண்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் இணைப்பு 12,500 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, இலக்கையும் தாண்டி, 13,301 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 

“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்”
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்று புறப்பட்டுவிட்ட பெண்களின் வாழ்வுக்கு ஊன்றுகோலாக, ஊரகப் பகுதிகளில் வாழும், ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், மகளிரின் சமூகப் பொருளாதார ஆற்றலை மேம்படுத்துவதற்கும், 2012-13 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற சிறப்புத் திட்டத்தை அம்மா அவர்களின் அரசு, திறம்படச் செயல்படுத்தி வருகிறது. சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளை, ஊரகப் பகுதிகளில் உருவாக்கி, அதன்மூலம், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வருமானத்தைப் பெருக்கவும், இத்திட்டம் பெரிதும் உறுதுணையாக உள்ளது.

பெண் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம், கிராமியத் தொழில் முனைவோர் திட்டம், தீன் தயாள் உபாத்தியாய கிராமத் திறன் வளர்ப்புத் திட்டம், தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம் போன்ற, சிறப்புத் திட்டங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளடக்கி, செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களுக்கென, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியாக, 2012-13 முதல் 2019-20ஆம் ஆண்டு வரை, 1,754 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

ஊரகப்பகுதிகள் மட்டுமின்றி, நகர்ப்புறத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக, வலுவான சமுதாய அமைப்புகளை உருவாக்கி, திறன் வளர்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்திட, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், அம்மா அவர்களின் அரசால், 2014-15ஆம் ஆண்டு முதல், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடியாரின் தலைமையிலான அம்மா அவர்களின் அரசால், கடந்த 4 ஆண்டுகளில், 45,096 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 44,461 குழுக்களுக்கு, 44 கோடியே 46 லட்சம் ரூபாய் ஆதார நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 20,712 சுய உதவிக் குழுக்களுக்கு, 615 கோடியே 22 லட்சம் ரூபாயும், 31,744 தனிநபர்களுக்கு, 184 கோடியே 37 லட்சம் ரூபாயும் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 22,083 இளைஞர்களுக்கு, 33 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.