தற்போதைய செய்திகள்

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி

குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளரான திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18ம்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

அவர் நேற்று தனது வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பாராளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருடன் வந்தார். குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க, முதல்வர்கள் மற்றும் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலையில், தனது வேட்புமனுவை பாராளுமன்ற செயலரிடம் தாக்கல் செய்தார் திரவுபதி முர்மு. அவரது வேட்புமனுவை பாராளுமன்ற செயலரிடம் பிரதமர் மோடி வழங்கினார்.