திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பத்தூர்

தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் ஹவுசிங் போர்டு பகுதி 1, பகுதி 2 பகுதியில் அன்மையில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகினர்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு குளம் போல் தேங்கி உள்ள நீரை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகளுககு உத்தரவிட்டார். மூன்று நாட்கள் ஆகியும் விடியா தி.மு.க. அரசின் நகராட்சி நிர்வாகம், மற்றும் மாவட்ட நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காந்தி சிலை அருகே, அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் விரைவில் திருப்பத்தூர் நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் சூழ்நிலையில், பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.