கடலூர்

கடலூர் அருகே பட்டாசு வெடித்து 3 பேர் உடல் சிதறி பலி -பட்டாசு ஆலை உரிமையாளர், மனைவி கைது

கடலுார்,

கடலுார் அருகே நாட்டு பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த பெரியக்காரைக்காடு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் மோகன்ராஜ் (வயது 36). இவர், அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி, எம்.புதுாரில், மாமனார் ஸ்ரீதருக்கு சொந்தமான நிலத்தில், நாட்டு பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலையுடன் இணைந்த குடோன் வைத்துள்ளார்.

இதற்காக, மனைவி வனிதா பெயரில் உரிமம் பெற்றிருந்தார். அந்த பட்டாசு குடோனில், நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த சித்ரா, 35, அம்பிகா, 50, சத்தியராஜ், 32 உட்பட பலர் பணியாற்றி கொண்டிருந்தனர். பகல் 12:30 மணிக்கு பட்டாசு தயாரிக்கும் குடோனில் திடீரென தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து கட்டடம் தரைமட்டமானது.

புகைமூட்டம் அடங்கிய பின், கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, பட்டாசு ஆலையில் வேலை செய்த சித்ரா, அம்பிகா மற்றும் சத்தியராஜ் உடல்கள் சிதறி கிடந்தன. இந்த காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், துக்க நிகழ்ச்சிக்காக பட்டாசு வாங்க வந்த, வெள்ளக்கரை சின்னதுரை மகன் வைத்திலிங்கம், 37 லேசான காயமும், அங்கு பணியாற்றிய இருவர் படுகாயமும் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலுார், ‘சிப்காட்’ பகுதிகளில் இருந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விசாரணையில், நாட்டு பட்டாசு தயாரித்த போது, வெடி தயாரிப்பு மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து வெடித்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மோகன்ராஜ், 36, அவரது மனைவி வனிதா, 30, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.