சிறப்பு செய்திகள்

ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் 50 துரித செயல் வாகனங்களின் சேவை – முதலமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் (Quick Response Vehicle) சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழகமெங்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கொரோனா தடுப்புப் பணிக்காக சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில், காற்றழுத்த கிருமிநாசினி தெளிப்பான் பொருத்தப்பட்ட 25 இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துரித செயல் வாகனங்களின் (Bolero Camper) சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இவ்வாகனங்களில் கிருமிநாசினி தெளித்திட தண்ணீரை பனித்திவலையாக மாற்றி பீய்ச்சியடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் மற்றும் பேரிடர் கால மீட்பு பணிக்காக 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரப்பர் இயந்திர படகுகள் பொருத்தப்பட உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்புப்பணிகள் முடிவுற்ற பிறகு, இவ்வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டடங்களில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் சி.சைலேந்திரபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.