திருப்பூர் அருகே பொதுமக்கள் திடீர் மறியல்

குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது என குற்றச்சாட்டு
திருப்பூர்
திருப்பூர் அருகே 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த வண்ணாந்துறைப்புதூர் கிராமம் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
20 நாள்களுக்குப்பின் விநியோகிக்கும் குடிநீரும், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
காலிக்குடங்களுடன் போராட்ம் நடைபெற்றதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை கைவிட மறுத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர்-காங்கேயம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ், தற்போது மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.