சிறப்பு செய்திகள்

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது பார்க்கத்தான் போகிறோம்-ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

சென்னை

அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று இப்படித்தான் தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது. ரொம்ப சந்தோசப்படாதீர்கள். காலம் விரைவில் வரும். நாங்களும் காத்திருக்கிறோம்.

உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது உங்கள் இயக்கத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி: அ.தி.மு.க.வின் விதிகளின்படி கட்சி தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு அதற்கு கட்சி அங்கீகாரம் தர வேண்டும் என்று விதிகளில் இல்லை என்று குறிப்பிட்டீர்கள்.

தேர்தல் நடத்தி முடித்தவுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டதா. அப்படி என்றால் அவர்கள் இன்னும் அந்த பதவியில் உள்ளதாகத் தானே அர்த்தம்.

பதில்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததா என்பது தான் உங்களின் கேள்வி. தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தான் அளிக்க வேண்டும். இதற்குத தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற வேண்டும் என்று சட்டம் இல்லை. ஒவ்வொரு கட்சியினுடைய பதியப்பட்ட அந்த சட்ட விதிகளின் படி நாங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிறோம்.

திமுகவில் 4 ஆண்டுகள் என்றால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று அர்த்தம் உங்கள் கட்சியில் என்ன சட்ட திட்டத்தை வகுத்துள்ளீர்களே அதன் அடிப்படையில் நீங்கள் தேர்தல் நடத்த வேண்டும். எங்கள் கட்சி விதிப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்பது.

இரண்டு ஆண்டுகள் கொரோனா காலம். அதன் காரணமாக முறையாகத் தேர்தல் ஆணையத்திடம் கால அவகாசம் அனுமதி பெற்று, இறுதி கால அவகாசம் அளிக்கப்பட்டு அந்த தேர்தலை நடத்தினோம். தேர்தலை நடத்தி அதன் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். யார் யார் என்ன பொறுப்பில் உள்ளார்கள் என்று தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறவேண்டும் என்று எங்கும் கிடையாது.

கேள்வி: எடுத்த எடுப்பிலேயே 23 தீர்மானங்களை நிராகரிக்க வேண்டிய காரணம் என்ன?

பதில்: யாருக்கும் காரணங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் அவர் வீட்டில் தீர்மானத்தை எழுதி விட்டால் அந்த தீர்மானத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமா. தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதும், ஏற்று கொள்ளாததும் பொதுக்குழுவின் அடிப்படை உரிமை. இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது.

கேள்வி: நேற்று ( நேற்று முன்தினம்) நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளார்களே…

பதில்: அவர்கள் போகட்டும். தோற்றவர்கள், விரக்தியின் விளிம்பில் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்களிடத்தில் யார் இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் என்ற மூன்று எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.

இந்த மூன்று பேரில் யார் எந்த கட்சிக்கு போகப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இது உட்கட்சி விவகாரம். கழகத்தின் உள்கட்சி விவகாரம். உலகத்திலுள்ள எல்லா கட்சியிலும் உட்கட்சி பிரச்சி‘னை வரும். பின்னர் தீர்க்கப்படும். தமிழ்நாட்டிற்கு வந்த முதலமைச்சர் ( ஸ்டாலின்) முத்து போன்று பேசியுள்ளார்.

இந்த மண்டபத்தில், அந்த மண்டபத்தில் என்று பேசியுள்ளார். உங்களுக்கு ஏன் வயிறு எறிகிறது. திமுக அப்படியே ஜனநாயக முறையில் நடத்தும் கட்சியா.

முதலில் இந்த கேள்வியை கேட்கும் தகுதி திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் கிடையாது. இந்த கட்சி அடிப்படை தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களால் வழி நடத்தப்படுகின்ற இயக்கம்.

ஒரு சாதாரண தொண்டர் கிளை கழக செயலாளராக இருந்து, ஒன்றிய செயலாளராக இருந்து, மாவட்ட பொறுப்புக்கு வந்து, மாநில பொறுப்புக்கு வந்து, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அமைச்சராக நியமிக்கப்பட்டு, பிறகு அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் அம்மா அவர்களால் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு இன்றைக்கு ஒன்றரை கோடி தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,

சிறப்பாக அம்மாவின் மறைவுக்குப்பிறகு 4 ஆண்டு காலம் முதல்வராக இருந்துள்ளார். இது தி.மு.க.வில் நடக்குமா. இந்த ஜனநாயகம் திமுகவில் உண்டா. உங்கள் குடும்பம் மன்னராட்சி குடும்பம்.

அங்கு வாரிசு அரசியல் தான் நடைபெறுகிறது. அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் இப்படி தான் உள்ளது. ரொம்ப சந்தோசப்படாதீர்கள். காலம் விரைவில் வரும். நாங்களும் காத்திருக்கிறோம். உங்கள் மகனுக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது உங்கள் இயக்கத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம்.

அடுத்த நீங்கள் இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தும்போது என்ன நடக்கப்போகிறது நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். திமுகவிலிருந்து யாரும் போகவில்லையா. தலைவர் போனார். சம்பத் போனார்.

வைகோ போகவில்லையா. அப்போது சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அம்மா அவர்கள் வைகோ அண்ணா சாலையில் சென்ற ஊர்வலத்தில் அம்மா மறித்து வேறு வழியில் செல்லாமல் விட்டிருந்தால், அறிவாலயத்தின் வழியாக சென்றிருந்தால் அன்றைக்கு தெரிந்திருக்கும் உங்களின் நிலைமை.

இன்றைக்கு ஸ்டாலின் நிலைமை என்ன என்பதும் தெரிந்திருக்கும். எனவே ரொம்ப சந்தோஷ பட வேண்டாம். இது எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சினை. நீதிமன்றமே ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரம் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொன்னது. நேற்று கூட்டப்பட்ட கூட்டம் (23ம்தேதி) முழுமையாக முறையாக அனைத்து சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு, கூட்டப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவினை நாங்கள் எந்த இடத்திலும் மீறாமல்,உத்தரவை முழுமையாக கடைப்பிடித்து பொதுக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி 23 தீர்மானங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதில் அவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டது. கழகம் ஒரு ஜனநாயக இயக்கம். பொதுக்குழு கூட்டத்தை தொலைக்காட்சிகள் முழுமையாகப்பதிவு செய்ய நாங்கள் அனுமதித்தோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.