கன்னியாகுமரி

ஈரானில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை – என்.தளவாய் சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

ஈரான் நாட்டில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கடலில் கலப்பதை தடுத்து, அவற்றை பாதுகாப்பாக செப்டிக் டேங்க் அமைத்து அதன்மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தலைமையில், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அரங்கத்தில் பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்வராயர், பொருளாளர் வினி, துணைச்செயலாளர் தினகரன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

ஈரான் நாட்டில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 612 மீனவர்கள் கொரானோ பாதிப்பின் காரணமாக, திரும்ப முடியாமல் 3 தீவுகளில் தங்கி உள்ளார்கள். முதலமைச்சர் குழுவை அனுப்பி, அக்குழுவில் நானும், கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய பங்குத்தந்தை ஸ்டீபன், ஆரோக்கியபுரம், பள்ளம், குறும்பனை ஆகிய பகுதிகளை சார்ந்த பங்குத்தந்தைகள் நேரடியாக டெல்லிக்கு சென்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், மத்திய இணையமைச்சர் முரளிதரனையும் சந்தித்து, மீனவர்களை மீட்டு உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வைத்தோம்.

மேலும், அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க வேண்டுமென அதற்கான அழுத்தத்தையும் கொடுத்தோம். மற்ற மாவட்டத்தை காட்டிலும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 600-க்கும் மேலான மீனவர்கள் ஈரானில் இருக்கிறார்கள். மீனவர்களை மீட்க முதலமைச்சர் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியும், நேரடியாக தொலைபேசி வழியாக பேசினார். கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களை மீட்க முதலமைச்சரும், நானும் முழு முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் சுகாதாரம் பெரியது என எண்ணக்கூடிய அரசு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ன் தலைமையிலான தமிழக அரசாகும். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊர்த்தலைவர்கள், ஊர் பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் ஊர்த்தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு, ஏக மனதாக மக்கள் நலனுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். இந்த குரல் நிச்சயமாக ஒலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பேசினார்.