தற்போதைய செய்திகள்

கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க தனி மனித சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் – சரத்குமார் வேண்டுகோள்

சென்னை

கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க தனி மனித சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக நாடுகளில் பரவிவரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் நோய்த்தொற்றின் தீவிர தன்மையை உணர்ந்து, தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.

பொருளாதார மந்தநிலை ஏற்படும் சூழலையும் பொருட்படுத்தாமல், மக்கள் பாதுகாப்பிற்காக பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்கா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை குறிப்பிட்ட காலத்திற்கு மூடல், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மாநில எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும், கொரோனா நோய் தாக்குதலை சாதாரணமாக கருதாமல் அதன் தீவிரத்தன்மையை உணர்ந்து, விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள், குழுவாக பொது இடங்களில் கூடுவதை தவிர்த்தல், விடுமுறையில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடாமல் பார்த்து கொள்ளுதல், சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்ளாதிருத்தல், கைகளை நன்கு கழுவுதல், நோய்த்தொற்றிற்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுதல் போன்ற செயல்களை பின்பற்ற வேண்டும்.

மேலும், தமிழக அரசின் முயற்சிக்கு முழுஒத்துழைப்பு நல்கி தனிமனித சுகாதாரத்தை பேணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த 08.03.2020 அன்று அ.இ.ச.ம.க விடுத்த வேண்டுகோள் மற்றும் மக்களின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரஸ் குறித்த காலர் டியூனை அந்தந்த மாநில மொழிகளில் மாற்றியும், இருமல் சத்தம் இல்லாமலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை வரவேற்கிறேன். பொதுமக்கள் அச்சமின்றியும், வதந்திகளை நம்பாமலும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.