தற்போதைய செய்திகள்

கண்ணமங்கலத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பேவர் பிளாக் தரை தளம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள், கண்ணமங்கலம் பகுதியில் முஸ்லிம் பண்டிகையின் போது அனைவரும் ஒன்றாக கூடி தொழுகை நடத்தும் இடத்திற்கு தரை அமைத்து தரும்படியும், சுடுகாட்டிற்கு செல்லும் பகுதியில் தார்சாலை அமைத்து தரும்படியும், அப்பகுதியில் குடிநீர்வசதி செய்து தரும்படியும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கண்ணமங்கலத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த முஸ்லிம்களிடம் தொழுகை நடத்த சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேவர் பிளாக் தரை தளம் அமைக்கவும், சுடுகாட்டு பாதை, போர் வெல் உள்ளிட்ட பணிகள் ரூ.32 லட்சம் மதிப்பில் செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து முஸ்லிம் மக்கள் அமைச்சருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது ஆவின் மாவட்ட துணைத்தலைவர் பாரி பி.பாபு, பாசறை மாவட்ட செயலாளார் ஜி.வி.கஜேந்திரன், ஒன்றிய செயலாளார்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால், மாவட்ட கழக இணை செயலாளார் நளினி மனோகரன், கண்ணமங்கலம் நகர செயலாளார் பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் கே.டி.குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.