தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை அரசு உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை, மற்றும் கால்நடைத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவி அம்மா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களின் நாடி துடிப்பாக அ.தி.மு.க இருக்கிறது. எனவே 2021-லும் அ.தி.மு.க அரசு தான் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா விவகாரத்தில் அரசின் ஆணையை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிறுவனமாக இருந்தாலும் அரசின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனாவிற்கு பயந்து யாரும் கோழிக்கறி சாப்பிடாமல் இருக்க வேண்டாம். கோழிக்கறி சூடு என்றால் மட்டன், மீன் சாப்பிடலாம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

பேட்டியின் போது வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, ராயபுரம் பகுதி கழக செயலாளர் எ.டி.அரசு, மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால், திரு.வி.க நகர் பகுதி கழக செயலாளர் ரா.வீரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.