சேலம்

உழவர் சந்தை நிர்வாக அதிகாரியை கண்டித்து மறியல் -சேலம் மாவட்டம் ஆத்தூரில் விவசாயிகள் போராட்டம்

சேலம்

தகாத வார்த்தைகளால் பேசி வரும் உழவர் சந்தை நிர்வாக அதிகாரியை கண்டித்து ஆத்தூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் உழவர் சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தலைவாசல் சுற்று வட்டார நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு வந்து தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த உழவர் சந்தையில் நிர்வாக அதிகாரி, அங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், போலி விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளதாகவும், அரசுத்துறை அதிகாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம்

தக்காளியை கொண்டுவந்து கூடுதல் விலை நிர்ணயம் செய்து உழவர் சந்தையில் விற்கப்படுவதாகவும், உழவர் சந்தை விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். மாவட்ட கலெக்டரிடம் மற்றும் வேளாண் அலுவலர்களிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் நிர்வாக அலுவலரை கண்டித்து ஆத்தூர் உழவர் சந்தை விவசாயிகள் பச்சை நிற உடை அணிந்து சேலம்-கடலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், உழவர் சந்தை நிர்வாக அதிகாரி சின்னதுரை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என தாசில்தார் கூறி விவசாயிகளை சமாதானப்படுத்தி காய்கறிகளை விற்பனை செய்ய அனுப்பி வைத்தார். இந்த மறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.