சிறப்பு செய்திகள்

மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவர் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார்

திருப்பூர்

கழக பொதுக்குழுவில் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்செயலாளராக எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட சார்பு அணி, பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும், நமது கட்சியினரும் எடப்பாடியாருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு இருக்கின்றனர். எடப்பாடியார் தான் கழகத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

நாலரை ஆண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இது. கழக பொதுக்குழு நடந்த மண்டபத்தின் முன்பு குறைந்த பட்சம் 50 ஆயிரம் இளைஞர்கள் திரண்டு இருந்ததை நாம் பார்த்தோம்.

1972ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். தூக்கி எறியப்பட்ட போது ஏற்பட்ட ஆதரவை போல, 1987ல் அம்மா அவர்கள் வண்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட போது ஏற்பட்ட எழுச்சியை போல, இன்றைக்கு பொதுக்குழுவில் எடப்பாடியாருக்கு பேரெழுச்சி ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு நின்றதை தமிழகம் கண்டது.

தமிழகத்துக்கு நம்பிக்கையான தலைமையாக எடப்பாடியார் கிடைத்து இருக்கிறார். இதன் மூலம் வலிமையான தலைமையாக அமர்ந்து தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்.

ஒட்டு மொத்த மக்களும், தொண்டர்களும் எடப்பாடியார் தான் ஒரே தலைமையாக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவார். எம்.ஜி.ஆர்., அம்மா அவர்களுக்கு பிறகு மக்களின் நம்பிக்கையை பெற்ற தலைவர் எடப்பாடியார் தான்.

இந்த கட்சி எந்த ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல. இஸ்லாமியர் ஒருவரான அ.தமிழ்மகன் உசேன் இந்த கட்சிக்கு அவைத்தலைவர் ஆகி இருக்கிறார். சாதாரண தொண்டனாக சேலம் மாவட்டத்தின் சிலுவம்பாலையத்தில் இருந்த எடப்பாடியார் இன்றைக்கு முதலமைச்சர் பொறுப்பு வரை வந்திருக்கிறார்.

இந்த கட்சி வாரிசுகளின் கட்சி அல்ல. யார் வேண்டுமானாலும் தலைமை பொறுப்புக்கு வரலாம். பொதுக்குழு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர் ஆதரவு இருந்தாலே பொதுக்குழு நடத்தலாம். ஏகோபித்த ஆதரவுடன் பொதுக்குழு நடைபெறும். அதில் எடப்பாடியார் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவ்வாறு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.