தற்போதைய செய்திகள்

திருத்தணி கோணசமுத்திரத்தில் புதிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் – பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

சென்னை

திருத்தணி கோணசமுத்திரத்தில் புதிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருத்தணி தொகுதி உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், புதிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.

புதிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க கோரிக்கை உரிய படிவத்தில், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு புதிய சங்கம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்.
அதேபோல் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்றால் 49 சதவீத நிதியை மத்திய மாநில அரசுகள் வழங்கும். 51 சதவீத நிதியை நெசவாளர்கள் சொந்த நிதியையோ, வங்கி கடன் பெற்றோ அளிக்க முன்வந்தால் அரசு கனிவுடன் பரிசீலனை செய்யும் என்றார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் துணை கேள்வி ஒன்றை எழுப்பினார். குடியாத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் நெசவாளர் வாழும் பகுதியாகும். ஒரு வரலாற்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். குடியாத்தம் பகுதியில் இருந்து தான் முதல் தேசிய கொடி தயாரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து செங்கோட்டையில் ஏற்பட்ட தேசிய கொடியானது குடியாத்தம் பகுதியில் தயாரிக்கப்பட்டது ஆகும். எனவே அங்கு ஜவுளி பூங்கா அமைத்து தர வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குடியாத்தத்தில் ஜவுளி பூங்காவை அரசே அமைத்து தர வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கூறுகிறார். உங்கள் ஆட்சியிலும், எங்கள் ஆட்சியிலும் அதே விதிமுறை தான் பின்பற்றப்படுகிறது. 49 சதவீத நிதியை மத்திய மாநில அரசுகள் வழங்கும். 51 சதவீத நிதியை நெசவாளர்கள் வழங்க வேண்டும்.

நிலத்தை அரசு கொடுக்க தயாராக இருக்கிறது. பத்திர பதிவையும் இலவசமாக செய்து தரப்படும். அனுகுசாலை, மின்சார வசதி உள்ளிட்டவற்றையும் அரசே செய்து தரும். முதலீட்டாளர்கள் 51 சதவீத நிதியை வழங்கினால் தான் அந்த இடம் அவர்களுக்கு சொந்தமானதாக இருக்கும் என்றார்.