சிறப்பு செய்திகள்

என் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார் – ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடி சவால்

சென்னை

என் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் நிரூபித்தால் அரசியலை விட்டே நான் விலகத் தயார். ஆதாரங்களை நிரூபிக்க தவறினால் நீங்கள் அரசியலை விட்டு விலக தயாரா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

ஏற்கனவே, முதலமைச்சர் மீதும், அரசின் மீதும் அவதூறு பழிகளைச் சுமத்தி நீதிமன்றம் சென்று மூக்கறுப்பட்டு தாங்கள் போட்ட வழக்கை, தாங்களாகவே திரும்ப பெற்றது திமுக. எங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்றே எங்களிடம் ஸ்டாலினைப் பற்றி சொல்லும் போது, உலகப் பெரும் ஊழலாம் ஸ்பெக்ட்ரத்தில், நாட்டின் முன்னணி நிறுவனத்தின் கட்டடத்தை வளைத்து, அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய முக்கிய புள்ளியிடமிருந்து குடும்ப தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதும், உங்களது ஒட்டுமொத்த குடும்பமும் அடித்த கொள்ளை பணத்தில், அதில் ஸ்டாலின் தன் உறவுகளையே ஊழல் தூண்டிலிக்கு புழுவாக்கிவிட்டு ஒரு லட்சம் கோடிக்கும் மேலான லஞ்ச பணத்தை சுருட்டி வைத்திருப்பதை இப்பூவுலக்கிற்கும், எங்களுக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அம்பலப்படுத்தினார்.

அந்த ஒரு லட்சம் கோடியிலிருந்து, இன்று கொரோனா காலத்தில் அல்லலுறும் மக்களுக்கு இல்லங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா பத்தாயிரம் ரூபாயை தாங்கள் சுருட்டிய பணத்தை பிரித்து கொடுக்க வேண்டுமென்று பலதரப்பிலும் எழுகின்ற கருத்துக்கு இன்று வரை அறிக்கை அக்கப்போர் நடத்தும் ஸ்டாலின் பதில் கூற மறுப்பது ஏன்? நான் கடைக்கோடி தொண்டாக பாடுபட்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அபிமானத்தைப் பெற்று படிப்படியாக உயர்ந்து இன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக, கோவை மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வருகிறேன். மு.க.ஸ்டாலின் சுமத்தும் எந்த குற்றச்சாட்டுகளையும் நான் எதிர்கொள்ளத் தயார்.

அப்பனுக்கு பின் மகன்- மகனுக்கு பின் பேரன்

ஆனால், அப்பனுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப் பேரன் என வம்சாவழி அரசியலை முன்வைத்து, இன்று திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினிடம் கடுகளவு நேர்மை இருக்குமானால், அண்ணா நகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாஷா உள்ளிட்டோரை வைத்து அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ விசாரணையை அவரே கோர வேண்டும். ஸ்பெக்ட்ரத்தில் அவருக்கு இருக்கும் பால்வாவுடனான தொடர்புகள் குறித்து விசாரணையை எதிர்கொண்டு தன்னை அவர் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்.

மேலும், மு.க.ஸ்டாலின் தனது பொதுக் கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். மு.க ஸ்டாலின் தான் கூறும் குற்றச்சாட்டு புகாரில் ஆதாரம் இருக்கும் என்று அவர் நம்பினால், இன்றே என் பதவியினை முழுமனதுடன் ராஜினாமா செய்ய நான் தயாராக இருக்கிறேன். அதே போல, இன்றே மு.க.ஸ்டாலினும் தனது பதவிகளை ராஜினாமா செய்து அவற்றை மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை துறந்துவிட்டு அரசியலை விட்டே அவர் ஒதுங்கிப் போக வேண்டும். அவர் நிரூபித்துவிட்டால், நான் அம்மா அவர்கள் வழங்கிய கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார். இதற்கு தயாரா என்பதை அறிக்கை புலி ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும். பலமுறை இதனை நான் கேட்டும், ஸ்டாலின் பதிலளிக்க தயங்குவதேன் ? பதுங்குவது ஏன் ?

அரசு துறை அதிகாரிகளை நிர்வாக வசதிக்காக விதிமுறைகளுக்கு உட்பட்டு மாற்றம் செய்வது என்பது சாதாரணமாக உள்ள நடைமுறையாகும். குறிப்பாக சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளை பணி நீட்டிப்பு வழங்கி, அவர்களை ஊக்குவிப்பதும், பயன்படுத்திக்கொள்வதும் அனைத்து காலங்களிலும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.

இவ்வளவு ஏன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிகாலத்தில், இதுபோன்று பணி நீட்டிப்பை யாருக்கும் வழங்கியது இல்லையா? கடந்த தி.மு.க அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் செயல்படுத்தப்படாத நிலையில், புரட்சித்தலைவி அம்மாவின் அவர்களின் அரசு உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அகில இந்திய அளவில் முதன்மை மாநிலமாக திகழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி அவதூறு பரப்பி வருகின்றார். இத்தகைய அவதூறுகளை தமிழக மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்துவதால், மக்கள் மன்றத்தில் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசிற்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் பெற்ற இமாலாய வெற்றிக்குப் பிறகு, இனி தமிழ்நாட்டு அரசியலில் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாக புரிந்து விட்டதால், கோல் அடிக்க முடியாத கோழை, ஆள் அடிப்பான் என்பது போல அம்மா அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், அரசியலில் தன் இருப்பை காட்டிக்கொள்ள உளறல் அறிக்கைகளை வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உச்சகட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார்.

எனவே, இதுபோன்ற மலிவான அரசியலை இனியும் தொடராமல், மு.க.ஸ்டாலின் தன்னை திருத்திக் கொள்வதுடன், அவதூறு அறிக்கைகளை வெளியிடாமல் இத்தோடு நிறுத்திக் கொள்வது, கொரோனா காலத்தில் அல்லலுறும் மக்களுக்கு, அவர் செய்கின்ற பெரும் நன்மையாகும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.