சிறப்பு செய்திகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலுடன் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த 23-ந்தேதி அன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக பொதுக்குழு கூடியது. அன்று முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன் மொழிய அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் வக்பு வாரிய தலைவருமான டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் கழக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையுடன் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை கழக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார். பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று கழக பொதுக்குழு கூட்டம் மீண்டும் ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெறும் என்று கழக அவைத்தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில் கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலுடன் தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, (இன்று) 27.6.2022 – திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக்கழகம்-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலுடன் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.