கழகத்தை அடமானம் வைக்க தி.மு.க.வை புகழ்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை,
தி.மு.க.வை எதிர்ப்பது என்பது என்பது தொண்டர்களின் ரத்தத்தில் ஊறியது. ஆனால் கழகத்தை அடமானம் வைக்க தி.மு.க.வை சட்டமன்றத்தில் புகழ்ந்தார் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மாவின் கனவு எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆனாலும் கழகம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டாரே. அம்மாவின் அந்த தெய்வ வாக்கை நிறைவேற்றுகிற பொறுப்பும், கடமையும் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் உண்டு.
ஆகவே இதில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே தொண்டர்களின் கருத்தை மாவட்ட செயலாளர்களுடைய கருத்தை பெருகின்ற போது, அனைவரும் ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.
வரும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மக்கள் கழகத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். அந்த வாக்குகளை பெற வேண்டும் என்றால் நீங்கள் தீர்க்கமான உறுதியான முடிவை எடுக்க வேண்டும். தி.மு.க.வை மன உறுதியோடு எதிர்க்கும் தலைமை தான் கழகத்தை வழி நடத்த வேண்டும்.
அப்படி யார் என்று பார்க்கும் போது கூட்டுத் தலைமையில் உயர்ந்து நிற்பவர் எடப்பாடியார் தான் என்று 99 சதவீதம் பேரின் கருத்தாக அங்கே முன் வைக்கப்படுகிறது. தமிழக மக்கள் நமக்கு தருகின்ற ஆதரவை பெறுவதற்கு நாம் மன உறுதியோடு, எடப்பாடியார் எடுத்திருக்கின்ற முடிவிலே ஒரு நாளும் பின்வாங்கியது கிடையாது. அவர் என்ன முடிவு எடுக்கின்றரே அந்த முடிவிலே கடைசி வரை நின்று, நிதானத்து பயணித்து அதில் தீர்வு கண்டுள்ளார்.
ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எத்தனை முடிவுகளை எடுத்துள்ளார். அவர் வீழ்வதற்கு காரணம் என்ன என்று பத்திரிகையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. உலகம் சொல்வதைத்தான் இந்த பத்திரிகை சொல்லியுள்ளது. ஊர் செல்வதையும், நிர்வாகிகள் சொல்வதையும், தொண்டர்கள் சொல்வதையும் இதில் சொல்லியிருக்கிறார்கள். தொண்டர்களை அவர் கண்டு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தொண்டர்களை அவர் கைவிட்டு விட்டார். அவர்களை சுமப்பதற்கு தயாராக இல்லை. அந்த சுமையை அவர் விரும்பவில்லை. அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் நலன் மீது மட்டுமே அதிக அக்கறை காட்டினார்.
தி.மு.க.வை எதிர்ப்பதற்கு தான், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இருக்கின்ற கழகத்தின் கொள்கை அண்ணாயிசம். தி.மு.க.வை எதிர்ப்பது தான் கழகத்தின் பிரதான கொள்கையாக இருந்து வளர்க்கப்பட்டது. தி.மு.க எதிர்ப்பு என்பது எங்கள் ரத்தத்தில் ஊறியது.
கழக தொண்டர்களின் ரத்தத்தில் ஊறியது தி.மு.க.வை எதிர்ப்பது என்பது தான். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும். தி.மு.க. என்பது தீயசக்தி. அந்த தீய சக்தியை எதிர்ப்பதிலே நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சட்டமன்றத்தில் என்ன நிகழ்வு நடந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக பேசுகிறார். அவர் கழக சட்டமன்றத்தில் உள்ள கழக உறுப்பினர்களை வழிநடத்தக்கூடிய பொறுப்பில் இருக்கிறார். இதனை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை.
நினைவூட்டுவதற்கு குறிப்பிடுகிறேன். பராசக்தி வசனத்தை என்னுடைய தந்தையார் படிக்க சொன்னார். நான் தலைமாட்டிலே வைத்து மனப்பாடம் செய்து ஒப்புவிப்பேன் என்று யார் மனதை குளிர்விப்பதற்காக, ஒட்டுமொத்த கழகத்தை அடமானம் வைப்பதற்காக அந்த சொல்லை சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்.
நமக்கு தி.மு.க.வை எதிர்ப்பது தான் பிரதான கொள்கை. அம்மா மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டது. அந்த தெய்வத்தாய் இந்த கழகத்தையும், தொண்டர்களையும் காப்பாற்றுவதற்காகத் தான் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளிலே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட பொய் வழக்கு, அதனை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அவர் நீதிமன்றத்திற்கு சென்றார்.
எதற்காக சென்றார். தன்னுடைய வாழ்வுக்காகவா சென்றார். தன்னுடைய பிள்ளையின் வாழ்வுக்காகவா, குடும்பத்தின் வாழ்வுக்காகவா சென்றார். சத்தியமாக இல்லை. இந்த தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக, ஒரு குடும்ப அரசியலிலிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக புரட்சித்தலைவி அம்மா நீதிமன்றத்தினுடைய படிக்கட்டுகளிலே ஏறி இறங்கினாரே இந்த தியாகத்தின் அர்த்தம் என்ன.
அம்மா பழிவாங்கபட்டதின் விலை என்ன. மதிப்பு என்ன. அதனுடைய அளவு கோல் என்ன. இதைத்தான் இன்றைக்கு தொண்டர்கள் கேட்கிறார்கள். ரவீந்திரநாத் எம்பி, முதலமைச்சரை சந்திக்கிறார். அது ஏதோ ஏதார்த்தமான சந்திப்பு அல்ல. அவர் சந்தித்து இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று வாழ்த்துகிறார்.
இதனை நீர்வளத்துறை அமைச்சர் பொது மேடையிலே விவாதிக்கிறார். இது கழகத்தை முடக்குகின்ற செயல் அல்லவா. தொண்டர்களை சோர்வடைய, நம்பிக்கையை இழக்க செய்கின்ற ஒரு செயலாகத்தான் தொண்டர்கள் அனைவரும் விவாதிக்கிறார்கள்.
எனவே தி.மு.க.வை மன உறுதியோடு எதிர்க்கின்ற தலைமை வேண்டும் என்பது தான் தொண்டர்கள் முன் வைக்கின்ற கருத்து. இந்த கருத்தை இன்றைக்கு எல்லோரும் முன்மொழிந்துள்ளார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.