தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரை,

5 ஆண்டாக பார்த்து விட்டோம் ஓ.பன்னீர்செல்வம் மன உறுதியோடு இல்லை. கழகத்தில் பிளவை ஏற்படுத்தி, மீண்டும் தொண்டர்களை மன துன்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தொண்டர்களின் ஆதரவோடு எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார் என்றும் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா காலத்திலிருந்து கழகத்தில் சாதி, சமய வேறுபாடு என்றைக்கு பார்க்கப்பட்டிருந்தது. ராமநாதபுரத்தில் சுந்தராஜனை அமைச்சராக்கி அம்மா அழகு பார்த்தார்.

திருச்சியில் தலித் ஏழுமலையை மத்திய அமைச்சராக்கினார். வாணியம்பாடியில் வடிவேலுவை நிறுத்தி வெற்றிபெற வைத்தார். அமைச்சராகவும் உருவாக்கினார். கழகத்தில் எங்கே ஜாதி இருக்கின்றது. எங்கே மதம் இருக்கின்றது. எல்லோரும் ஓர் ஜாதி, எல்லோரும் ஒரே மதம் என்ற அடிப்படையில் தான் கழகம் 50 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது.

கழகத்திற்கும், தி.மு.க.வுக்கும் குஸ்தி சண்டை. அதுபோல கழகத்தில் இருவருக்குள் சண்டை என்றால் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

இன்னொருவர் இந்த குஸ்தி சண்டையை எதிர்கொள்வதற்கு மன உறுதியோடு என்று தெரியும். ஆகவே தான் குஸ்தி சண்டைக்கு தயார் நிலையில் தகுதி உள்ளவராக எடப்பாடியார் இருக்கிறார் என்று ஒட்டுமொத்த தொண்டர்களும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஒருவர் மன உறுதியோடு இல்லை (ஓ.பன்னீர்செல்வம்). கடந்த 5 ஆண்டுகளாக நாம் பார்த்து விட்டோம். எனவே இவர் தான் ( எடப்பாடி கே.பழனிசாமி) மன உறுதியோடு இருக்கிறார். மோத விட்டுப் பாருங்கள். அவர் ( எடப்பாடியார்) வெற்றி பெற்றுக்காட்டுவார்.

தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார். இன்றைக்கு காணாமல் போன வீரத்தை மீட்டெடுப்பார். அந்த மன உறுதி அவரிடத்தில் இருக்கின்றது. மக்கள் ஆதரவு உள்ளது. தொண்டர்களின் ஆதரவு உள்ளது.

நீங்கள் ( ஓ.பன்னீர்செல்வம்) அனுதாபத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்தி, மீண்டும் தொண்டர்களை மன துன்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.