தற்போதைய செய்திகள்

ஒற்றைத்தலைமை வேண்டுமென பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கிறது

கழகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் கும்பலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை,

பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரே நீதிமன்றம் சென்றது கழக வரலாற்றில் இதுவரை நடந்தே இல்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கின்றது என்று கழகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு கேள்வி விடுத்துள்ளார்.

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றம் சென்றார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ஒரு தலைவரே பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுத்த வரலாறு இதுவரை கழகத்தில் நடந்ததே கிடையாது.

இந்த பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று காவல்துறையில் நீங்கள் மனு அளிக்கும் போது ஒரு வார காலமாக காத்திருக்கும் அந்த தொண்டர்களின் மன நிலை என்னவாகும்.

பொதுக்குழு என்பது விவாதிப்பதற்கு தான். இதற்கு முன்னர் இது தொடர்பாக 4 மணி நேரம் கூட்டம் நடைபெற்றதே. அதில் ஏதாவது ஜனநாயகத்திற்கு விரோதமாக ஏதாவது நடைபெற்றதா. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

தலைமை கழக நிர்வாகிகள் சொல்கிறார்கள். சீர் திருத்தம் வேண்டும் என்று. ஒற்றை தலைமை வேண்டும் என்று. இதனை பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கின்றது.

ஆனால் ஜனநாயகத்தை தகர்க்கும் வகையில் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று எந்த தலைவராவது இதுவரை கேட்டதுண்டா. காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததுண்டா. வரலாற்றில் நாம் பார்த்துண்டா.

இதுபோன்ற அநியாயம், அக்கிரமம் எங்காவது நடந்ததுண்டா. அதனை தடுக்க அத்தனை முயற்சிகள் எடுத்த பிறகு, தோல்வி பெற்ற பிறகும் பொதுக்குழுவிற்கு வருகிறார்கள். அப்படி இருந்தும் கூட எடப்பாடியார் பொதுக்குழுவில் அவரை அண்ணன் என்று தான் அழைத்தார்.

தங்களுடைய உரிமையை பறிக்கிறார்கள் என்று ஆதங்கத்திலிருந்த தொண்டர்களை நான் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைதிப்படுத்துகிறோம். எடப்பாடியார் பல முறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். இதுதான் அங்கு நடைபெற்றது. தங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதை வெளிக்காட்ட சில விரும்பத்தகாத செயல் நடைபெற்றது.

இதனை யாரும் விரும்பவில்லை. இதனை யாரும் ஆதரிக்கவில்லை. அது நடைபெற்றிருக்கக்கூடாது என்பது தான் எல்லோருடைய கருத்து. தொண்டர்களின் மனக்குமுறல் வெளிப்பட்டிருக்கின்றது. அதை வைத்து நீங்கள் ஆதாயம் தேடலாம் என்றால், அதை வைத்து பிளவு ஏற்படுத்தலாம் என்றால் எப்படி.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.