தமிழகம்

சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை – முதலமைச்சர் விளக்கம்

சென்னை

கொரோனா வைரஸ் தொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் எனவே சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், கொரோனா வைரஸ் காரணமாக அச்சமாக இருக்கிறது. வீட்டுக்குப் போனாலும் உடனே குளிக்கச் சொல்கிறார்கள். எனவே போகப்போக தனிமைப்படுத்திவிடுவார்களோ என்ற நிலைமை இருக்கிறது.

இப்படியான சூழலில் பேரவையை நடத்த வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரி. ராமசாமி, கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழுவீச்சுடன் செயல்படுத்தி வருகிறது. நோய் வருவது இயற்கை. ஆனால் தற்போது வந்துள்ள வைரஸ் அபாயகரமான நோய்தான். இருந்தாலும் தேவையான நடவடிக்கைகள் பேரவையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் பரிசோதிக்கப்பட்டுதான் பேரவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.