ரூ.10 லட்சம் கேட்டு நண்பனையே கடத்திய கும்பல் -போலீசை கண்டதும் தப்பி ஓட்டம்

விழுப்புரம்
ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள், போலீசாரை கண்டதும் நள்ளிரவில் தப்பியோடி விட்டனர். சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் சூர்யகுமார் (வயது19). இவர் தனது தாய் கிருஷ்ணவேணியுடன் வசித்து வருகிறார். கிருஷ்ணவேணி அப்பகுதியில் வட்டிக்கு விடுவது வழக்கமாம். நேற்று முன்தினம் சூர்யகுமார், நண்பர்களான சரவணப்பாக்கத்தை சேர்ந்த சூர்யா, நந்தா, மாரி, பெரியபாலா, முரளி ஆகியோர் ஜானகிபுரம் பகுதிக்கு வந்துள்ளனர். ஏற்கனவே, சூர்யகுமார் குடும்பத்துடன் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்தபோது இவர்கள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக சூர்யகுமாரை 5 பேரும் அழைத்துள்ளனர். பின்னர், ஜானகிபுரம் பகுதிக்கு வந்ததும் சூர்யகுமாரை காரில் ஏற்றிக்கொண்டு கரடிப்பாக்கத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், சூர்யகுமாரிடம் 5 பேரும் சேர்ந்து உங்கள் அம்மாவிடம் நிறைய பணம் இருக்கிறது. ரூ.10 லட்சம் வாங்கித்தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு மறுக்கவே சரமாரியாக அவரை தாக்கியுள்ளனர்.
மேலும், கிருஷ்ணவேணிக்கு போன் செய்து பணம் எடுத்து வருமாறும் மிரட்டியுள்ளனர். அடி தாங்க முடியாத சூர்யகுமாரும் வேறு வழியில்லாமல் தனது தாயை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு அடித்து மிரட்டுவதாகவும், பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார். அப்போது, கிருஷ்ணவேணி என்ன செய்வதென்று திக்குமுக்காடிய நிலையில் கடைசியில் மாவட்ட காவல்துறை உதவியை நாடியுள்ளார்.
பின்னர் தாலுகா போலீசார் அறிவுரையின் பேரில் சினிமா படத்தில் வருவதை போல் ரூ.10 லட்சம் பணத்தை ஒரு பேக்கில் போட்டுக்கொண்டு தயாராகியுள்ளார். அப்போது, கிருஷ்ணவேணிக்கு போன் செய்த கும்பல் விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரம் சாலைக்கு தனியாக நள்ளிரவு வர வேண்டுமென கூறியுள்ளார்.
அதன்படி, பண பேக்கை எடுத்துக்கொண்ட கிருஷ்ணவேணி அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளனர். யாருக்கும் தெரியாமல், போலீசார் கிருஷ்ணவேணியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்ற போது, போலீசார் ஜீப்பில் அங்கு விரைந்தனர். போலீசாரின் ஜீப்பை கண்டதும், 5 பேர் கொண்ட கும்பல் சூர்யகுமாரை காரிலிருந்து இறக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.
போலீசார் துரத்திச்சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. பின்னர் காயமடைந்த சூர்யகுமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து, சூர்யகுமார் அளித்த புகாரின் பேரில் 5 பேர் கொண்ட கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.