கன்னியாகுமரி

குலசேகரம் போலீசில் கையெழுத்திட சென்ற வாலிபர் மர்ம மரணம்-கொலை செய்யப்பட்டப்பட்டதாக தந்தை புகார்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இது கொலை என்று வாலிபரின் தந்தை புகார் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே உள்ள முல்லைசேரிவிளையை சேர்ந்தவர் சசிகுமார். பால் வடிக்கும் தொழில் தொழிலாளி.

இவரது மகன் அஜித் (வயது 22). ஐ.டி.ஐ முடித்து விட்டு மினிலாரியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அஜித் கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகுறது.

இதையடுத்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த அஜித் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் குலசேகரம் காவல் நிலைத்தில் கையெழுத்து போட செல்வதாக கடந்த 23-ம்தேதி வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அஜித் விஷம் குடித்துவிட்டதாகவும், அவரை கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் குலசேகரம் போலீசார் அஜித்தின் வீட்டிற்கு சென்று தெரிவித்துள்ளனர்.

அதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அஜித் நேற்று முன்தினம் இறந்தார். அஜித் விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை என்றும், போலீசார் கொலை செய்துவிட்டதாகவும் கூறி அவரின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர்.

இதுகுறித்து அஜித்தின் தந்தை சசிகுமார் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய்து உள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

“என் மகன் அஜித்குமார் கடந்த 23-ம்தேதி காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றான். மேலும் அவனது செல்போன் இருப்பதாகவும், அதையும் வாங்கி வருவதாகவும் கூறினான். காலை 9 மணிக்கு காவல் நிலையம் செல்லும் போது சந்தோஷமாகத்தான் சென்றான்.

மாலை 3.30 மணியளவில் குலசேகரம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்.பி.சி.ஐ.டி எனக்கூறிக்கொண்டு ஒருவர் வந்து என் மகன் எங்கே என கேட்டார். காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றாக கூறினேன். அதற்கு அவர், `உன் மகன் அரசமூடு ஜங்ஷனில் வைத்து விஷம் குடித்து விட்டான், தும்பக்கோடு அரசு மருத்துவமனையில் இருக்கிறான்’ எனக்கூறினார்.

மாலை 4 மணியளவில் குலசேகரம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சசிகுமார் வீட்டுக்கு வந்து, தன்னுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு வர வேண்டும் எனக்கூறினார். நான் போக மறுத்து விட்டேன்.

இரவு 7.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ்.எஸ்.ஐ சசிகுமார் உள்ளிட்டோர் என் வீட்டுக்கு வந்து இப்போது எங்களுடன் வரவில்லை என்றால் கைது செய்து அழைத்து செல்ல உரிமை இருக்கிறது என்றனர்.

இதனால் நான் வாடகைக்கு கார் எடுத்து அவர்களுடன் சென்றேன். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் என் மகன் சிகிச்சையில் இருப்பதை காட்டியதுடன், செவிலியரிடம் இருந்த ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கினர்.

பின்னர் போலீசார் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த பேப்பரில் மிரட்டி கையெழுத்து வாங்கினர். போலீசாரின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் பார்க்கும்போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் வைத்து என் மகன் தாக்கப்பட்டு, அவர்களால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.

அதேநேரம், அஜித் காவல் நிலையத்தின் வெளியில் வைத்து விஷம் குடித்ததாகவும். அதை பார்த்து காவலர்கள் காப்பாற்ற முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் என்ன நடந்தது என்ற உண்மையான விவரம் உறுதிச்செய்யப்படாமலே உள்ளது. காவல் நிலையத்துக்கு கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.