தற்போதைய செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட அளவில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அளவில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் ஆலோசனை வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.உயிர்க்கொல்லி ‘கொரோனா’ தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் பல்வேறு துறைகளின் பங்கும், அவற்றின் பொறுப்புகளும் என்னென்ன என்பது குறித்து தலைமைச் செயலாளர் விவாதித்தார்.பொது இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.

பல்வேறு துறைகள், தனியார் அமைப்புகள் மற்றும் சுகாதாரம் குடும்பநலத்துறை உடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து அது குறித்து அவ்வப்போது விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும்
அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அழைக்க வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் அதிகபட்சம் 100 அலுவலர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலை இருந்தால், காணொளி காட்சிக்கு ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.கூட்டம் அதிகமாக இருக்கும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும் அதே போல திருமண விழாக்கள் உள்ளிட்ட பொது விழாக்கள் நடைபெறும் பட்சத்தில் அதில் பங்கேற்கும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் மக்கள் இருக்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் செயலாக்க தனி அதிகாரி (நோபல் ஆபிசர்) நியமிக்கப்படவேண்டும். அவரின் பெயரும் தொலைபேசி எண்ணும் மற்ற துறை அலுவலர்களுக்கு தரப்பட வேண்டும்.
சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்கள், இதர ஊழியர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.மாவட்ட அளவில் 24 மணி நேரம் செயல்படும் விதத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் தெளிவாக எழுதப் பட்டிருக்க வேண்டும். தேவையான முக கவசங்கள், தெர்மல் சோதனைக் கருவி உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சுய உதவிக் குழுக்களுக்கும் சுகாதார கல்வி போதிக்கப்பட வேண்டும்.மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இதேபோல வருவாய்த்துறை, எல்லை சோதனைச்சாவடி அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் சேவை, உணவு பாதுகாப்பு துறை, போலீஸ் உள்துறை, ரயில்வே போக்குவரத்து துறை, விமான நிலைய கட்டுப்பாட்டு நிர்வாகம், துறைமுக டிரஸ்ட், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், கிராமப்புற மேம்பாட்டுத்துறை, இந்து அறநிலையத்துறை, சுற்றுலா துறை, தகவல் மற்றும் பொது மக்கள் தொடர்புத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் காணொளி மூலம் தலைமைச் செயலர் ஆலோசனை வழங்கினார்.