சிறப்பு செய்திகள்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் – பேரவையில் முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து ஜோலார்பேட்டை, சின்னக்கோடியூர் கிராமத்தில் உள்ள தங்கவேலு பீடி மண்டியில் ஏற்பட்ட தீவிபத்து மற்றும் மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு குறித்து பேசினார். மேலும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விடக்கூடாது என்று பேசினார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

இப்பொழுது தான் அவையிலே வந்து இந்தப் பிரச்சினையை எழுப்பி இருக்கின்றீர்கள். இதன் முழு விளக்கத்தையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கேட்டு நான் பின்னர் விளக்கம் அளிக்கின்றேன். தற்போது கிடைக்கப் பெற்ற விளக்கத்தை உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் 16.3.2020 அன்று பிற்பகல் 1 மணியளவில் சின்னக்கோடியூர் கிராமத்திலுள்ள தங்கவேலு பீடி மண்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 30 பீடி இலை பண்டல்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த மண்டியில் 10 தொழிலாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பீடி மண்டியில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களின் சகோதரர்கள் அழகிரி, ராவணன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வருகின்றனர். கே.சி.காமராஜ் நிர்வாகம் செய்து வருகிறார்.

இது ஒரு சாதாரண தீ விபத்து தான். ஆனால் ஊடகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஒரு தவறான செய்தி வெளிவந்திருக்கிறது. அந்தச் செய்தியை வைத்து தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்கள் சட்டமன்றத்திலே இதை எழுப்பி இருக்கின்றார்.

இதுவரை இது தொடர்பாக எந்தவிதமான புகார்களும் காவல்துறையில் பெறப்படவில்லை. யாரும் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பதை தங்கள் வாயிலாக இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல், ஏதோ இப்பொழுதுதான் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாக ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்கள் குறிப்பிடுகின்றார். உங்களுடைய ஆட்சிக் காலத்திலும், உங்களுடைய சிவகங்கை நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் காரில் செல்லும் போது, ரிமோட் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

இது எல்லா ஆட்சியிலும் நடைபெறும் சம்பவம் தான். இருந்தாலும் குற்றங்களை குறைப்பதற்காகவும், இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் தான், ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆகவே, இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, எல்லா ஆட்சியிலும் அவ்வப்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் சொந்த பிரச்சனைக்காக ஏற்படுகிறதே தவிர, வேறு காரணங்களுக்காக அல்ல. இருந்தாலும் அதை கட்டுப்படுத்தி இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.