தற்போதைய செய்திகள்

கோவையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில், மத்திய அமைச்சரிடம் கழக எம்.எல்.ஏக்கள் மனு

கோவை,

ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். அகமதாபாத்தில் இருக்கக்கூடிய ஜவுளி சந்தையை போல், சோமனூர், பல்லடம், காரணம்பேட்டை ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

கோவைக்கு வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஜவுளித்தொழில் மற்றும் ஜவுளி தொழிலாளர்களின் நலன் காக்க பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பஞ்சு விலை உயர்வால் கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொழில் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் பஞ்சு விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை மூலமாக மருத்துவ உதவி வழங்க வேண்டும்.

என்டிசி மில்கள் வியாபாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து வருவதால், அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பருத்தி உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. வேளாண் பலகலைக்கழகம் வாயிலாக தொழில்நுட்ப வளர்ச்சியிலும், விதை தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் அளித்து தரமான அதிக பருத்தி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவுளித்துறையில் ஏராளமான வட இந்தியர்கள் பணியாற்றி வருவதால், அவர்களுக்கு வாடகையில் தற்காலிக தங்குமிடம் அமைத்து தர வேண்டும். அகமதாபாத்தில் இருக்கக்கூடிய ஜவுளி சந்தையை போல், சோமனூர், பல்லடம் & காரணம்பேட்டை ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட்டால் அது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் எதிர்பார்க்கும் மானியம் வழங்கப்பட்டால் அது அவர்கள் பஞ்சு உற்பத்தியை மேலும் அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

கோவையில் இருந்து சத்தி செல்லும் பிரதான சாலையில், மிகவும் மோசமாக பழுதடைந்து இருக்கக்கூடிய கோவை முதல் கணபதி வரையிலான இந்திய உணவு கழகத்திற்கு சொந்தமான சாலையை உடனடியாக சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ, மாவட்ட கழக செயலாளர்கள்
பிஆர்ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, கழக இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை, கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், மதுக்கரை நகர கழக செயலாளர் சண்முகராஜா, கழக வழக்கறிஞர்கள் முத்து இளங்கோ, சுரேஷ், ஆவின் எஸ்.முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.