மதுரை

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்-அரசுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வலியுறுத்தல்

மதுரை:-

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சம்பக்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரூ.15 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த கால கழக ஆட்சியின் போது இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடியார் பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கினர். அதன்படி சம்பக்குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் புதிய ரேஷன் கடை மற்றும் சிறு பாலம் வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இவற்றை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒதுக்கி நிச்சயம் செய்து தருவேன்

திருப்பங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 5,000 நெசவாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா கைத்தறி தொழிலாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார்.

அதேபோல் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் இலவசமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கினார். அம்மாவிற்கு பின் அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் இலவச மின்சாரத்தை வழங்கி நெசவாளர்களை பாதுகாத்தார். அதேபோல் தற்போது பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார், பிரேம் ராஜன், பொறியாளர்கள் வசந்தி, திருமலைசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், கிளை கழக செயலாளர் பூமிநாதன், ஹார்விபட்டி செல்வகுமார், சந்திரசேகர், ஸ்டாலின், கருப்பு, முருகன், ராஜ்மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.