தற்போதைய செய்திகள்

மீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகளின் பராமரிப்பு செலவினங்களுக்கு குறுகிய கால கடன்கள் : அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

சென்னை

மீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகளின் பராமரிப்பு செலவினங்களுக்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்  மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி மாவட்டம், மிடலாம் மீனவ கிராமத்தின் கடற்கரை, கடல் அரிப்பினால் அதிகஅளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் படகு நிறுத்தும் பகுதிகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது. கடல் அரிப்பினை தடுப்பதற்கும், 290க்கும் அதிகமான படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும் தூண்டில் வளைவுகள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் போன்ற வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம், ரோச்மாநகர் மற்றும் தங்கச்சிமடம் கிராமங்களிலுள்ள மீன் இறங்குதளங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திட நேர்கல் சுவர், அலைத்தடுப்பு சுவர், வலை பின்னும் கூடம், மின் உலர்தளம் மற்றும் சாலை வசதிகள் 19 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இதன்மூலம் ரோச்மாநகர் மற்றும் தங்கச்சிமடம் மீனவ கிராமங்களை சேர்ந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்திட இயலும்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழமுந்தல் மீனவ கிராம மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சுமார் 475 மீனவ குடும்பங்கள் பயன்பெறும் வகையிலும், அவர்களது 125 மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக, படகு அணையும் தளம் மற்றும் மீன் ஏலக்கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வசதிகளினால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு கூடுதல் விலை பெறுவதோடு அவர்களது வாழ்க்கைத் தரமும் உயரும்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவ கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளத்திலுள்ள படகு அணையும் தளங்களின் நீளம் பற்றாக்குறையின் காரணமாக இங்குள்ள மீன்பிடி படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்படுவதால், கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் போது ஒன்றோடொன்று மோதி சேதமடைகிறது. இதனை தடுத்திடும் வகையில் மீன் இறங்குதளத்திலுள்ள படகு அணையும் தளங்கள் 10 கோடி ரூபாய் செலவில் நீட்டிக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம், சின்னமேடு மற்றும் கூழையார் மீனவ கிராமங்களில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கின்றனர். பருவமழை காலங்களில் இக்கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் இக்கிராமங்களில் உட்புகுந்து விடுகிறது. மேலும் இக்கிராமங்களில் மீன் ஏலக்கூடமின்றி மீனவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இக்குறைகளை நீக்கி மீனவர்கள் பயன்பெறும் வகையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக சிறிய நேர்கல் சுவர்கள், மீன் ஏலக்கூடங்கள் மற்றும் அணுகுசாலை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலூர் மாவட்டம், தாழங்குடா மீனவ கிராமத்தில் கடலரிப்பினால் மீனவர்களின் வீடுகள் மற்றும் படகு நிறுத்துமிடங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. கடல் அரிப்பிலிருந்து இக்கிராமத்தை பாதுகாக்கவும், மீனவர்கள் சிரமமின்றி கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும், பிடித்த மீன்களை சுகாதாரமான முறையில் கையாண்டு, நல்ல விலைக்கு விற்கவும் 15 கோடி ரூபாய் செலவில் கடலரிப்புத் தடுப்புச் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளம், மீன் ஏலக்கூடங்கள் மற்றும் அணுகுசாலைகள் அமைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை குளச்சல், சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக்காடு புதூர் மற்றும் சின்னவிளை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 260 விசைப்படகுகளும், 1850 நாட்டுப்படகுகளும் தங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இத்துறைமுகத்தில் படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே 16 கோடி ரூபாய் செலவில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள அருவிக்கரை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி மீனவ கிராமங்களில் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் போதுமான வசதிகள் இல்லாமல் துயரத்திற்குள்ளாகின்றனர். இக்குறைகளை நீக்கி மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீனவர்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட அலைத்தடுப்பு சுவர், மீன் ஏலக்கூடங்கள் மற்றும் படகு அணையும் தளங்கள் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் 18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்திலுள்ள மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கும் ஏதுவாக 8 கோடி ரூபாய் செலவில் வலை பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், படகு அணையும் சுவர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய புதிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலுள்ள மீன் ஏலக்கூடங்கள் மீனவர்களின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் சின்னமாங்கோடு, புதுக்குப்பம் மீனவ கிராமத்திலுள்ள படகு நிறுத்தும் பகுதி மற்றும் நுழைவுக் கால்வாய்கள் அதிக அளவில் தூர்ந்து உள்ளதாலும் மீனவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே 9 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் மேற்கண்ட இடங்களில் கூடுதல் மீன் ஏலக்கூடம், சாலை சீரமைப்பு, தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 32 மீனவ கிராமங்களில் மீனவ மக்களின் வசதிக்காக தற்போது 6 இடங்களில் மீன் இறங்குதள வசதிகள் உள்ளன. அதிக அளவிலான மீனவர்கள் பயன்பெறும் வகையில், இம்மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், வடக்கு அம்மாபட்டினம் மற்றும் புதுக்குடி ஆகிய இடங்களில் 6 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக மீன் ஏலக்கூடம், மீன் உலர்களம் மற்றும் கான்கிரீட் சாலை போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேட்டூர் மீன் பண்ணையில் நிரந்தர தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி, கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்புத் தொட்டிகள் அமைத்திடவும், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் மீன் பண்ணையில் கூடுதல் மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைத்திடவும், தேனி மாவட்டம் வைகை மற்றும் மஞ்சளாறு மீன் பண்ணைகளில் கூடுதலாக மீன் வளர்ப்புக் குளங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரப்பாக்கம் மீன் பண்ணையில் மீன்குஞ்சு வளர்ப்புக் குளங்களை மேம்படுத்தவும் 13 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மீன்குஞ்சுகள் தேவையை அதிகரித்திடும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி மீன்பண்ணையில் புதிய மீன்குஞ்சு உற்பத்திக் குளங்கள் அமைத்திடவும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் பண்ணையில் உள்ள சினைமீன் குளங்களை சீரமைத்து, அதிக அளவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து மீன் வளர்ப்போருக்கு வழங்கிட ஏதுவாக 4 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடலூரில் மீன்வளத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், திருச்சியில் மீன்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு புதிதாக பயிற்சி மையங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடங்களும், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பயிற்சி மையங்களுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடங்களும் 9 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை மீனவ கிராமத்தில் சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை கடற்கரைப் பகுதியில் சுகாதாரமான முறையில் கையாளவும், நல்ல விலைக்கு விற்பனை செய்திடவும் மற்றும் வலைகளை சீரமைப்பதற்கும் ஏதுவாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வலை பின்னும் கூடம் மற்றும் இதர கரையோர வசதிகள் ஏற்படுத்தப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் பழையார் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகளை பழுதுநீக்கம் செய்வதற்கான சாய்தள வசதிகள் மற்றும் கொடியம்பாளையம் மீனவ கிராமத்தில் மீன்களை கையாளத் தேவைப்படும் கரையோர வசதிகள் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், கூனியூர் அரசு மீன் பண்ணை 1956-ல் அமைக்கப்பட்டது. இந்த மீன்குஞ்சு வளர்ப்புப் பண்ணையை புனரமைத்து, மீன்குஞ்சு உற்பத்தியை அதிகரித்திட, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மீன்குஞ்சு வளர்ப்புத் தொட்டிகள் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

மீன்வளத்துறை கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட அமலாக்கத்திற்கென தனியே ஒரு பிரிவு 112 பதவிகளுடன் உருவாக்கப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 18 அலகுகளுடன் இயங்கி வருகிறது. முதற்கட்டமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அலகுகளுக்கு புதிய கட்டடங்களும், அனைத்து அமலாக்கப்பிரிவு அலகுகளுக்கும் ரோந்துப்பணிக்கான கருவிகள் மற்றும் அறையணிகள் 3 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

சிறு படகுகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்திறனை அதிகரித்திடவும், அவர்கள் சிரமமின்றி கடலில் அதிகதூரம் சென்று மீன்பிடித்திடவும், அவர்களின் வருவாயை அதிகரித்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்திட ஏதுவாக 1000 பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு அலகு ஒன்றிற்கு 40 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 48,000 ரூபாய் மானியத்தில் வெளிப்பொருத்தும் அல்லது உட்பொருத்தும் இயந்திரங்கள் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

இறால் பண்ணைகளில் நாற்றங்காலில் இறால் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு குளங்களில் இருப்புச் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பிழைப்புத்திறன் கூடுவதால் உற்பத்தி அதிகரிக்கிறது. நாற்றங்கால் அமைக்க தேவையான 100 டன் கொள்ளளவுள்ள தொட்டிகள், காற்றுப்புகுத்திகள், மின் மோட்டார்கள் ஆகியவற்றிற்கு 40 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக அலகு ஒன்றிற்கு ரூபாய் 2 லட்சம் வீதம் 100 அலகுகளுக்கு 2 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பாசி கையாளும் உட்கட்டமைப்பு வசதிகளான கடற்பாசி நாற்றாங்கால்கள், கடற்பாசி உலர்த்தும் தளம், கடற்பாசி சாறு பிழியும் கருவிகள், சேமிப்புக்கிடங்கு, அலுவலக அறை மற்றும் கடற்பாசி மிதவை கட்டும் பணிக்கூடம் போன்ற வசதிகளுடன் கூடிய 5 அலகுகள் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த உட்கட்டமைப்பு வசதிகள் மீனவ மகளிர் தொய்வின்றி தொடர்ந்து கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ளவும், அதிக வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்வளர்ப்பினை அதிகரித்திட 10 ஹெக்டேரில் மீன்குஞ்ச வளர்ப்பு, 50 ஹெக்டேரில் மீன் வளர்ப்பு, 285 பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கும், கூண்டுகளில் மீன் வளர்ப்பு, மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மற்றும் ஊராட்சிக் குளங்களில் மீன் வளர்த்திடவும் உள்ளீட்டு மானியம் வழங்கப்படும். மேலும் 16 மாவட்டங்களில் 7000 ஹெக்டேரில் உள்ள பாசன நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்புச் செய்யப்படும். இத்திட்டங்கள் 10 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் நெய்தலூர், விருதுநகர் மாவட்டம் பிளவக்கல், கலூர் மாவட்டம் திருக்காம்புலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அரசு மீன்குஞ்சு வளர்ப்புப் பண்ணைகளில் காற்றுபுகுத்தி மற்றும் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மீன் குஞ்சுகளின் பிழைப்புத் திறனை அதிகப்படுத்தி தரமான மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்திட 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் ஆண்டிற்கு 300 லட்சம் மீன் குஞ்சுகள் கூடுதலாக வளர்த்தெடுக்கப்படும்.

மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் மீன்பாசிக்குத்தகை பொது ஏலமுறையில் விடப்படுவதால் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்கங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், மீன்பாசிக் குத்தகையில் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும் என்ற மீனவக் கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகையில் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இறால் மற்றும் சூறை மீன் வகைகளின் விற்பனையை உள்ளூரில் மேம்படுத்திடும் பொருட்டு இறால் மற்றும் சூறை மீன் வகைகளின் மதிப்புக் கூட்டு உணவுப் பொருட்களின் விற்பனைக்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மீன் விற்பனை நிலையங்களில் பிரத்தியேக வசதிகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.

ஆழ்கடல் மீன்வள ஆதாரங்களை உகந்த அளவில் பயன்படுத்திட ஏதுவாக அரசு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பிடிக்கப்படும் சூறை மற்றும் ஆழ்கடல் மீன்களுக்கு மீனவர்கள் ஏற்றுமதி சந்தையில் கூடுதல் விலை பெற்றிட ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை மீன் பதனிடும் வசதிகள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுப் பணிகள் 20 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்படும்.

திருவள்ளீர் மாவட்டம் பெரிய மாங்கோடு மீனவ கிராமத்திலுள்ள சுமார் 1000 இயந்திரமாக்கப்பட்ட பாரம்பரிய நாட்டுப்படகுகள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் கிராமத்திலுள்ள இயக்கப்படும் 400 இயந்திரமயமாக்கப்பட்ட நாட்டுப் படகுகள், வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெயினை பெற்று பயன்பெறும் வகையில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய டீசல் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணைய நிதியிலிருந்து அமைக்கப்படும்.

மீன்பிடித் தடைக்காலங்களில் விசைப்படகுகளின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக, மீட்பிடிப் படகு உரிமையாளர்களுக்கான நிதித்தேவையினை கருத்தில் கொண்டு விசைப்படகு ஒன்றிற்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை குறுகிய காலக்கடன் ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்.

மீனவ மகளிர்க்கு அலுவலக மேலாண்மை, கைப்பேசி, கணினி மற்றும் மின்சாதனங்களை பழுது நீக்கும் பயிற்சிகள், மீன் பொருட்கள் தயாரித்தல் மற்றும் மரச்செக்கு சமையல் எண்ணெய் தயாரித்தல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் 20 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

தரமான மீன்கள் மற்றும் மீன் உணவின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்தும் வகையில், மீன்வளர்ப்பு, மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனைத் தொழில்நுட்பங்கள் குறித்து காட்சிப்படுத்திடவும், 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் மீன் திருவிழா நடத்தப்படும்.

நாகப்பட்டினத்திலுள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுதிகள் மற்றும் கூடுதல் அலுவலகம் மற்றும் வகுப்பறை கட்டடங்கள் 23 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மையங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. அவற்றுள், நாகப்பட்டினம் மற்றும் சென்னை மாதவரத்திலுள்ள பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரத்திலுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் ஆகிய மூன்று வளாகங்களில் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விடுதிக் கட்டடம் தற்போது சிதைவடையும் நிலையில் உள்ளது. இக்கல்லூரியில் மாணவர்களின் தங்கும் வசதிகளை மேம்படுத்திடவும், பொன்னேரியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விடுதியில் கூடுதல் மாணவர்கள் தங்கும் வகையில் 12 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டடங்கள் கட்டப்படும்.

மீன்வளர்ப்போரிடம் பொறுப்பான நீர் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பல்கலைக்கழகம் உருவாக்கிய தீவிர மீன்வளர்ப்பு முறையான நீர் மாற்றிடத் தேவையில்லா தொழில்நுட்பங்கலை பண்ணையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், சிறந்த நீர் பயன்பாடு குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்க அமைப்பு அவசியமாகிறது. இத்திட்டமானது, ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை மாதவரத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிப் பண்ணையில் அமைக்கப்படும்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மீன்வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டிய மீன் பொருட்களை தயாரிக்கும் நவீன தொழில்நுட்பங்களை, தொழில் முனைவோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திட ஏதுவாக, காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பக் காப்பகங்களும், திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மீன்பதன தொழில்நுட்பக் காப்பகங்களும் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மீன்வளர்ப்புக் குளத்திலுள்ள ஊட்டச்சத்து நிறைந்த நீரை, மறுசுழற்சி செய்து காய்கறிகள் வளர்க்கும் தொழில்நுட்பம் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன்வளர்ப்பில் மறுசுழற்சி செய்யப்படும் நீரில் மண்ணில்லா முறையில் காய்கறி வளர்ப்புப் பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.