தற்போதைய செய்திகள்

தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் உறுதி

ஈரோடு,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆற்றலை ஒருங்கே பெற்றவர் எடப்பாடியார். கழக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் அவர் பொதுச்செயலாளர் ஆவார் என்று முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி.இராமலிங்கம் கூறி உள்ளார்.

ஈரோடு மாநகர் மாவட்ட கழக அலுவலகமான இதயதெய்வம் அம்மா மாளிகையில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு வருகிற 11ம்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இன்றைய நிலவரப்படி பொதுக்குழுவில் உள்ள 2665 உறுப்பினர்களில் 2441 பேர் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இன்று கூட 9 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவர்களின் ஆதரவு கொடுத்ததின் நோக்கம் தீய சக்தியான தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்பதற்காக தான்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி திராவிட இயக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக கழகம் திகழ்ந்தது. அதுபோல தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரின் ஆற்றலை ஒருங்கே பெற்றவர் எடப்பாடியார். வருகிற பொதுக்குழுவில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவிக்கிற சூழல்நிலை தற்போது உள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது அனைத்து தொண்டர்களும் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எடப்பாடியார். இந்தியாவிலே தமிழகம் சிறந்த மாநிலம் தமிழகம் என்ற பெருமையை பெற்று தந்தவர் எடப்பாடியார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தி.மு.க அரசு பெயர் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடி வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது என்று கூறியதை போல மாறாத தி.மு.க. என்றைக்கும் மாறாது. நடைபெற இருக்கிற பொதுக்குழுவில் எடப்பாடியார் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி.

ஈரோடு மாவட்டம் என்றைக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் கோட்டை என்பதை பலமுறை நிரூபித்து உள்ளது. கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் கழக தொண்டர்களின் ஆதரவு பெற்ற தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி விளங்கி வருகிறார். அ.தி.மு.க தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் எடப்பாடியாருக்கு என்றும் உள்ளது.

இவ்வாறு ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் கூறினார்