கோவில் அருகில் டாஸ்மாக் கடை அமைய கிராம மக்கள் எதிர்ப்பு – தடுத்து நிறுத்தக்கோரி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி
கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் நீண்ட காலமாக யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் கடையை தி.மு.க.வினர் தூண்டுதலின் பேரில் செவல்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகில் இடமாற்றம் செய்வதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தீத்தாம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் டாஸ்மாக் கடை நீண்டகாலமாக இயங்கி வருகிறது. இந்த கடை தற்போது எந்தவித இடையூறும் இல்லாத இடத்தில் தான் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அமைச்சர் தூண்டுதலின் பேரில் செவல்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் பள்ளி அருகே இடமாற்றம் செய்யப்போவதாக தெரியவந்தது.
அதற்கான பணிகளை அதிகாரிகள் செய்து வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்த்தாம்பட்டி கிராமமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது
கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் இடையூறு இல்லாத இடத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் செவல்பட்டியில் ஸ்ரீபத்திரகாளி அம்மன்கோவில் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடத்திற்கு, அதுவும் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடத்திற்கு மாற்றம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே டாஸ்மாக் மதுபான கடை இடமாற்றம் செய்யப்படுவதை தடுத்து அதற்கான பணிகளை தற்போது செய்து வருவதை உடனே ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.