வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்திலிருந்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

காஞ்சிபுரம்,
40 லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் தி.மு.க.வை சேர்ந்த இல்லாமல்லி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி துணைத்தலைவர் மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்மோட்டார் பொருட்கள் களவாடப்பட்டதாகவும், மேலும் இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் போலியான ரசீது மூலம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், எனவே ரூ.40 லட்சத்திற்கும் மேல் வாலாஜாபாத் பேரூராட்சியில் ஊழல் நடந்திருப்பதாகவும், கழக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர்.
மேலும் கழக கவுன்சிலர்களின் வார்டு பகுதிகளில் துப்புரவு, மாஸ் கிளினிங் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும் கழக உறுப்பினர்கள் வார்டுகளில் மக்கள் பணிகளை புறக்கணிக்கும் பேரூராட்சி தலைவரை கண்டித்தும், பேருராட்சி கூட்டத்தை புறக்கணித்து விட்டு 14-வது வார்டு கவுன்சிலரும், பேரூராட்சி கழக செயலாளருமான அரிகுமார் தலைமையில் கழக கவுன்சிலர்கள் 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் ஊழல் முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.