தர்மபுரி

கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

நகர்மன்ற திமுக தலைவர் பாதியில் ஓட்டம்

தருமபுரி

தருமபுரி நகர்மன்ற கூட்டத்தில் பணிகள் ஒதுக்குவதில், பாரபட்சம் காட்டுவதாக, திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் கேள்வி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் தி.மு.க நகர் மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர் ஓட்டம் பிடித்தனர்.

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தி.மு.க நகராட்சி தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியவுடன் தீர்மானங்களை வாசித்து வந்தனர். அப்பொழுது திடீரென அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கழக உறுப்பினர்கள் என்னென்ன தீர்மானங்கள் என தெரிவிக்க வேண்டும். கழக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முறையாக பணிகள் ஒதுக்குவதில்லை என நகர்மன்ற தலைவரிடம் கேள்வி கேட்டனர்.

இதனால் தலைவர் மற்றும் கழக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கழக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திமுக நகர்மன்ற தலைவர் லட்சுமி மற்றும் ஆணையாளர் சித்ரா இருவரும் திடீரென எழுந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனால் கழக உறுப்பினர்கள் 13பேர் நகர் மன்ற கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து வந்த நகர்மன்ற தலைவர், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் வந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதில் பணிகளுக்கான ஒப்பந்தம் பெறப்பட்டு பணிகள் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் தங்கள் பகுதியில் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை எனக்கூறி கழக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் மாது பதில் கூறினார். இதனால் திமுகவினரின் அத்துமீறலால் கழக உறுப்பினர்களுக்கும், திமுக நகர்மன்ற தலைவர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பொழுது திமுக உறுப்பினர்களும், எங்கள் பகுதிக்கு கூட பணிகள் ஒதுக்கவில்லை. ஆனால் அதிமுக பகுதிக்கு தான் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் மேலும் அதிமுக, திமுக மன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனைத்தொடர்ந்து நகர் மன்ற தலைவர் கணவர் மாது, பணிகள் நடைபெறுவதற்காக ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது, பணிகளை தொடங்குவதற்கு கால தாமதமாகும் என தெரிவித்தார்.

இதனை அடுத்து திடீரென நகர் மன்ற அலுவலகத்திற்கு காவல்துறையினர் வந்தனர். இதனை கண்ட கழக மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் தேவைகளை நகர்மன்ற அலுவலகத்தில் கேட்கும் பொழுது கழக உறுப்பினர்களை கைது செய்வதற்காக காவல் துறையினரை வரவழைத்து உள்ளனர்.

நகர் மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிக்கான தேவைகளை கூட கேட்க விடாமல் அச்சுறுத்தும் விதமாக நகர் மன்ற தலைவர் நடந்து கொள்கிறார் என்று கழக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம், காவல் துறையினர் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி நகராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளும் திமுகவினரே தன்னிச்சையாக செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் நகர்மன்ற தலைவராக உள்ள லட்சுமி அவரது கணவர் மாதுவின் அதிகாரப்போக்கு, சர்வாதிகாரப் போக்கு நகராட்சியில் உள்ளது. இதனால் சடங்குக்காக நகரமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது.

நகராட்சியில் 33 வார்டுகளில் கழக உறுப்பினர்கள் உள்ள 13 வார்டுகளில் எவ்வித பணிகளும் நடைபெறுவதில்லை. முறையாக சாக்கடை அள்ளுவதில்லை கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் திமுகவினர், தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வதால், தி.மு.கவினர் மீது கழக உறுப்பினர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தருமபுரி நகராட்சி 6-வது வார்டு மன்ற உறுப்பினர் முன்னா மற்றும் கழக உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி, செந்தில் வேல், மாதையன் ஆகியோர் கூறுகையில்

தனது வார்டுக்கு குப்பை அகற்றுவதற்கு கழிவுநீர் கால்வாய் சாக்கடை துப்புரவு பணிக்கு ஆட்கள் வருவதில்லை என்றும் தொடர்ந்து பலமுறை கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக கவுன்சிலர்கள் வார்டுகளில் மட்டும் நகராட்சியில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். அவரின் பேச்சுக்கு திமுக கவுன்சிலர்கள் மறுப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.

நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனது வார்டில் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை என்றும் மற்றவர்களுக்கு பணிகள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார். 6வது வார்டு பகுதியில் பணி நடைபெறவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என பேசினார்.