தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி பேட்டி

சென்னை,

எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும் என்றும், அனைவருமே ஒற்றைத்தலைமையை தான் விரும்புகின்றனர் என்றும் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி கூறினார்.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நிறுவப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டி காக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. இன்று ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக கழகம் வளர்ந்து நிற்கின்றது.

கழகத்தை தொண்டர்கள் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கழகத்திற்கு ஒற்றை தலைமை வேண்டும். அதற்கு எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் கடந்த நாடாளுமன்ற, உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் இரட்டைத்தலைமை இருந்ததால் தான் தோல்வியை தழுவினோம்.

இனிவரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னாலும், சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றாலும் ஒற்றை தலைமை வேண்டும்.

ஒற்றைக் தலைமை என்பது தி.மு.கவை எதிர்க்க கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், கழக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடியார் தான் கழக பொதுச் செயலாளராக வர வேண்டுமென்று கழகத்திலுள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் விரும்புகின்றனர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கையொப்பமிட்டு செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு கழக பொதுக்குழு கூட்டத்தில் கலந்கொள்ள தபால் அனுப்பினார்கள். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும்,

தலைமை கழக நிர்வாகிகளும் கடந்த 23-ம் தேதி ஒன்று கூடினோம். கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து பொதுக்குழுக் கூட்டம் நடக்கக்கூடாது. அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் ஆணையாளரிடம் புகார் மனுவினை கொடுத்தார்.

பின்னர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம், தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்கிறார்.

அங்கே பொதுக்குழுவை நடத்தலாம், 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம் என்று தீர்ப்பு வருகின்றது. அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருமே எங்களுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற முழக்கத்தை உறுப்பினர்கள் எழுப்பினர்.

ஏற்கனவே கடந்த 17-ந்தேதி தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மாவட்ட கழக செயலாளர்கள் அனைவருமே எங்களுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இப்படி அனைவருமே ஒற்றைத்தலைமையை தான் விரும்புகின்றனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி கூறினார்.