தற்போதைய செய்திகள்

பொங்குபாளையத்தில் புதியதாக கால்நடை கிளை நிலையங்கள் – பேரவையில் கழக உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கோரிக்கை

சென்னை

மக்களின் கனவுகளை நிறைவேற்றும் முதல்வரின் ஆட்சியில் பொங்குபாளையத்தில் புதியதாக கால்நடை கிளை நிலையங்கள் அமைத்து தரவேண்டும் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கோரிக்கை விடுத்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பேசியதாவது:-

போக்குவரத்து நெரிசல் நிறைந்த, திருப்பூர் வடக்கு பகுதியில் ஐந்தரை கிலோ மீட்டரில் சுமார் 900 கோடி மதிப்பில் புதிய மேம்பால திட்டம் அறிவித்தும், எங்கள் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை அறிவித்து அதற்கு விரைவில் அடிக்கல்நாட்ட வருகை தரும் முதலமைச்சருக்கும், திருப்பூர் வடக்கு தொகுதியில் வீடில்லா ஏழை மக்களுக்காக, சுமார் ரூ.140 கோடி மதிப்பில் 2100 வீடுகளை தந்து, எண்ணற்ற பசுமை வீடுகளை, நெசவாளர்களுக்கு தந்த துணை முதலமைச்சருக்கும்,

கால்நடை துறையை எல்லோரும் வியப்போடு பார்க்கும் வண்ணம், இத்துறையின் சார்பாக, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா ஒன்றை சேலம், தலைவாசல் பகுதியில் அறிவித்து அடிக்கல் நாட்டி, கிராமப்புற, ஏழை விவசாய பெண்களுக்கு வாழ்வாதாரம் உயர்ந்திட ஆடு, மாடு, கோழி குஞ்சுகள் என தந்து அவர்களின் வாழ்க்கைக்கு உதவிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருக்கும் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் அரசு பொறியியல் கல்லுரியும், அரசு கலை கல்லுரியும், திருப்பூர் வடக்கு தொகுதியில், பெண்களுக்கென தனி மேல்நிலை பள்ளி அமைந்திட மருதாசலபுரம் பகுதியில், இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான 2.75 ஏக்கர் நிலத்தினை நில வாடகைக்கு அனுமதித்து அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமையவும், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம், திருப்பூர் தெற்கு தொகுதிக்குள் அமைந்துள்ளது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள ஒன்றிய பகுதி மக்கள் சுமார் 23 கிலோ மீட்டர் வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே திருப்பூர் வடக்கு தொகுதியின் மையப்பகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து தரவும், தொட்டிபாளையம் வருவாய் கிராமத்தை இரண்டாக பிரித்து வடக்கு தொகுதியில் ஒரு கிராம நிர்வாக அலுவலகம் அமைக்கவும்,

திருப்பூர் மாநகராட்சி அங்கேரிபாளையம் பகுதியில் கே.2092 செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை நகர கூட்டுறவு சங்கமாக தரம் உயர்த்தி தருவதற்கும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியின் மையப்பகுதியில் அமைத்து தருமாறும், காளிபாளையம் பஞ்சாயத்து வாரணாசிபாளையம் மற்றும் பொங்குபாளையம் பஞ்சாயத்து பொங்குபாளையத்தில் புதியதாக கால்நடை கிளை நிலையங்கள் அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பேசினார்.