தற்போதைய செய்திகள்

குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது

முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி ஆவேசம்

திருச்சி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை தீயசக்தி என்று குறிப்பிட்டாரோ அவரை பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.கவோடு நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கழக நிறுவனர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1972-ம் ஆண்டு இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே தீயசக்தி கருணாநிதியும், தி.மு.கவையும் தமிழ்நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை வலிவோடும், பொலிவோடும் நடத்தினார்கள்.

சிறந்த நல்லாட்சியை தமிழக மக்களுக்கு வழங்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு கழகம் அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில் நமக்கெல்லாம் முத்தாய்ப்பாக எடப்பாடியார் கழகத்திற்கு தலைமை ஏற்று ஆட்சியையும், கட்சியையும் பொலிவோடும், தெளிவோடும் நடத்தி வந்தார்.

கழக ஆட்சி 2 மாதத்தில் கலைந்து விடும். 3 மாதத்தில் கலைந்து விடும் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக எடப்பாடியார் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் வாயிலாக சிறந்த நல்லாட்சியை நடத்தி காட்டினார்.

கழகத்தில் சிறு பிளவு ஏற்பட்டபோது கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்தில் கட்சியின் சின்னம் முடக்கப்பட்ட போது அம்மா சின்னத்தை மீட்டெடுத்தார்.

அதேபோல், முடக்கப்பட்ட சின்னத்தை மீட்டெடுத்த பெருமை எடப்பாடியாரையே சாரும். ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருக்கின்றார். அவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை தீயசக்தி என்று குறிப்பிட்டாரோ அவரை பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார். தி.மு.க அமைச்சர்களை பாராட்டுகிறார். இதுபோன்ற நிகழ்வுகள் கழகத்திலுள்ள ஒவ்வொரு தொண்டனையும் பாதிக்கக்கூடியதாக இருந்தது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பாராட்டியது கழக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கின்றது. கழகத்தில் உள்ளவர்கள் தி.மு.கவினரை சந்தித்தாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள்.

ஒரு கழக நாடாளுமன்ற உறுப்பினர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார். இதை நாங்கள் கேட்டால் என்னுடைய தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்கத்தான் நான் ஸ்டாலினை சந்தித்தேன் என்று கூறுகிறார்.

அது ஏற்புடைய பதில் அல்ல. ஏனென்றால் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது ஒருமுறை கூட ஓ,பன்னீர்செல்வத்தின் மகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் எடப்பாடியாரை சந்தித்து தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறவில்லை.

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகள் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.கவோடு நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கின்றது. குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் நினைக்கின்றார். அது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி கூறினார்.