வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் புகழாரம்

நாமக்கல்,
வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் பொதுக்கூட்டம் பள்ளிப்பாளையம், நேரு திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளிப்பாளையம் நகர கழக செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.செந்தில் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் டி.கே.எஸ். என்ற டி.கே.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன் சிறப்புரையாற்றியதாவது:-
“இன்னா செய்தாரை ஒருத்தல்
அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்”
என்ற குறளுக்கு நடைமுறை உதாரணமானகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா . 1947ல் நாட்டுக்கு விடுதலை வாங்கி தந்தோம். எங்களை யாரும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த காங்கிரசை 20 ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலை விட்டு ஓரங்கட்ட வைத்ததில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.
இந்திய அரசியல் வானில் தனித்துவமான பேரொளியாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழினத்தின் ஆன்மா என்று அண்ணாவின் குரலை சொல்லலாம். தாய்த்தமிழ்நாட்டுக்கு அந்தப்பெயரை மீட்டெடுத்து சூட்டியவர் அறிஞர் அண்ணா தான்.
மாநிலங்களால் ஆனது இந்தியா. மாநிலங்கள் டெல்லியின் கிளைகள் அல்ல என்பதை டெல்லிக்கு ஆழமாக உணர்த்தியவர் அண்ணா, இந்திய ஒன்றியத்தை பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியம் அளவுக்கு அதிகார பரவல் மிக்க தேசமாக்க வலியுறுத்தியவர். பரம்பரை பணக்காரர்கள், மிட்டாமிராசுகளின் கைகள் மேலோங்கிய இந்திய அரசியல் களத்தின் அதிகாரத்தை சாமானியர்களின் கைகளுக்கு கடத்தியவர்.
தனது அரசியல் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களையும், கடுமையான கண்டனங்களையும், மிகப்பெரிய பாராட்டுக்களையும் சந்தித்தபோதிலும் எல்லாவற்றையும் ஒரேமாதிரி எடுத்துக்கொண்டார். இதையே, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கும் உணர்த்தினார். தமிழக அரசியலில் தனக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக்கொண்டவர். ஆடம்பரத்தை விரும்பாதவர். எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்.
பேரறிஞர் அண்ணா தான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அமைச்சர்களுக்கான சம்பளத்தில் சரிபகுதியை குறைத்துக்கொள்வதாக அறிவித்தவர். முதலமைச்சரானவுடன் அரசாங்கத்தால் வீட்டிற்கு கொடுக்கக்கூடிய உயர்தரமான மேஜை, நாற்காலி, சோபா போன்றவற்றைக் கூட வாங்க மறுத்துவிட்டவர். பதவி போய்விட்டால் மறுநாள் இதை எடுத்துப் போய் விடுவார்கள். பதவி காலத்தில் இந்த சவுகரியங்களுக்கு பழகிவிட்டால் பின்னால் அதிலிருந்து விலக முடியாது என்று தன் குடும்பத்தாருக்கு எடுத்துச்சொல்லி புரிய வைத்த மகத்தானதொரு தலைவர்.
பேரறிஞர் அண்ணா இறுதிக்காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, தலைமையேற்ற தி.மு.க.வோ, 1971ம் ஆண்டில் காங்கிரசுடன் கைகோர்க்க தொடங்கி, இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.
ஒரு ஜனநாயக இயக்கத்தில், எல்லா பொறுப்புகளையும் ஒருவரே வகிப்பது, பிறருக்கு சந்தர்ப்பம் தர மறுப்பதாகும் என்று கருதினார் பேரறிஞர் அண்ணா. எல்லோருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து, அனைவரையும் அரவணைத்து செல்லும் அவருடைய இந்த அணுகுமுறையால் தான் பல இளம் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமடைந்தார்கள்.
தந்தை பெரியார் என்ற மிகப்பெரிய ஒரு தலைவரிடம் இருந்து பிரிந்து சென்ற போதும், பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய தனித்தன்மையாலேயே வெற்றி பெற்றார். தந்தை பெரியாரின் எதிர்ப்பு அரசியலை கடைசி வரை அவர் கையில் எடுக்கவில்லை. தி.மு.க.வின் தலைவர் நாற்காலி, தந்தை பெரியாருக்காக காலியாகவே விடப்பட்டது.
1949ல் தந்தை பெரியார் அவர்களை விட்டுப் பிரிந்து தனிக்கட்சியைத் தோற்றுவிக்க நேர்ந்த நிலையிலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ள விரும்பாமல், பெரியார்தான் என்னுடைய ஒரே தலைவர் என்று அறிவித்து விட்டு, பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் 1955ல் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலேயே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி, ‘தம்பி வா..தலைமையேற்க வா!’ என்று நாவலர் நெடுஞ்செழியனை முன்மொழிந்தார். பேரறிஞர் அண்ணாவின் முடிவை ஏற்க மறுத்தவர்களிடம், “நான் வலுவோடும், செல்வாக்கோடும் இருக்கும் போதே என் மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும், பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும்.
நான் வலுவிழந்த பிறகு மற்றவர்கள் பொறுப்பேற்றால், அப்போது கழகத்தைச் சீர்படுத்தவோ, செம்மைப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ என்னால் முடியாமல் போகும், வேறு யாராலும் முடியாமல் போய்விடும் என்றும் விளக்கமளித்தார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் அனைத்திலும் குடும்பத்தினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை அவர் பெற்றுக்கொண்டாலும், வீட்டுக்கும், கட்சிக்கும் இடையே ஒரு திட்டவட்டமான ஒரு இடைவெளியைப் பராமரித்ததுடன், “வீட்டுக்கும் , ஆட்சிக்கும் இடையே ஒரு கோடு வேண்டும்” என்று தன்னுடைய தயக்கத்துக்கு விளக்கம் சொன்ன ஒரு மாபெரும் தலைவர். ஆனால், இன்றைய தி.மு.க.வோ வீட்டையும், ஆட்சியையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கிறது.
ஒரு முதல்வராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு அரசியல்வாதியாகவும் மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், கட்சித்தொண்டர்களை தனது உடன்பிறந்த தம்பிகளைப் போன்று அரவணைத்துச் சென்ற பேரறிஞர் அண்ணா என்றென்றும் தமிழக மக்களால் மறக்க முடியாத ஒரு மாபெரும் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்