தற்போதைய செய்திகள்

வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனி பட்மேடு ரயில்வே மேம்பால பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை

வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனி பட்மேடு ரயில்வே மேம்பால பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி, பட்மேடு ரயில் கடவுப்பாதை 1-ல் மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பாக எழுப்பப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பின்வருமாறு பதிலளித்தார்.

வில்லிவாக்கம் தொகுதி, வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனி, பட்மேடு ரயில் கடவுப்பாதை-1ல், மேம்பாலம் அமைப்பதற்காக, வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு, 58 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டில், பாலத்திற்கு தேவையான தனியார் நிலத்தை கையகப்படுத்தவும், ஐ.சி.எப். நிறுவனத்தின் 1,230 ச.மீ. பரப்பளவு நிலத்தை, 35 வருட கால குத்தகைக்கு எடுக்கவும், தேவையான 34 கோடி ரூபாய் நிதியும் அடங்கும். ரயில்வே பகுதியில், ரயில்வே துறை மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதியாதாரம் மூலதன மானிய நிதி மூலம் பெறப்பட்டது. ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு, பணியாணை 10.9.2019 அன்று வழங்கப்பட்டது. இப்பாலம் அமைப்பதற்கு தேவையான நிலத்தை, ஐ.சி.எப் நிறுவனத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் பெறுவதற்கு, 10 கோடியே 75 லட்சம் ரூபாயை, பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் செலுத்தும் போது, ஐ.சி.எப் நிறுவனம், சுற்றுச்சுவர் வெளிப்புறம் உள்ள சாலையை பயன்படுத்துவதற்கும் சேர்த்து, 15 கோடியே 36 லட்சம் ரூபாய் செலுத்துமாறு கேட்டுக் கொண்டது.

இத்தொகையை ஐ.சி.எப் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு, தனி அலுவலரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புகைக் கடிதமும், ஐ.சி.எப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை செலுத்த, ரயில்வே வாரியம் மற்றும் ஐ.சி.எப் நிறுவனத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. கொளத்தூர் பிரதான சாலையில், ஆழ்துளை கடைக்கால் மீது, பளுதாங்கும் சோதனை நடத்துவதற்கு ஏதுவாக, ஆழ்துளை கடைக்கால் அமைக்கும் பணியும், ஐ.சி.எப். சாலைப் பகுதியில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும், தற்போது நடைபெற்று வருகிறது. இப்பாலப்பணி, 18 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என்பதை, தெரிவித்துக் கொள்கிறேன்.