சிறப்பு செய்திகள்

உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலின் புது கலாச்சாரம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை,

தஞ்சாவூர் சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளார். உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலா, இது தான் தி.மு.க. திராவிட மாடலின் புது கலாச்சாரம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அ.தி.மு.க இருக்கிறது. உலகில் முதன் முதலில் ஏழைகளுக்காக 17.10.1972-ம் ஆண்டு இந்திய இயக்கத்தை துவங்கினார் புரட்சித்தலைவர் இருக்கும் வரை தி.மு.க கோட்டை பக்கம் எட்டிப்பார்க்க முடியவில்லை. அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அ.தி.மு.க.வை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார்.

எங்களை வழிநடத்தி செல்லும் அம்மா அவர்களின் காலில் விழுவதை கேலி, நையாண்டி செய்தனர் ஆனால் இன்றைக்கு தி.மு.க.வின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது. தஞ்சையில் உதயநிதி வந்த போது அங்கு தஞ்சை மேயர் அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்து உள்ளார். உதயநிதி அதை கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். காலில் விழுவதை சுயமரியாதை என்று விமர்சித்த தி.மு.க. இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது.

மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது. மூத்தோர் காலில் இளையோர் விழுவது, தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம். ஆனால் இன்றைக்கு வயதில் இளையோரிடம், மூத்தோர் காலில் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்கப்பட்டுள்ளது. இந்த புது கலாச்சாரம் தான் திராவிடத்தின் மாடலா. இது தான் திராவிட மாடலில் சுயமரியாதையை இப்படித்தான் அம்பலப்படுத்துகிறதா. நிச்சயம் இதை மக்களே கேட்பார்கள்.

முதலமைச்சர் வருகைக்காக சாலை போடுவது என்பது பாதுகாப்பு நடவடிக்கை. ஆனால் அதில் வேலூரில் கேலிக்கூத்து நடந்துள்ளது வேலூரில் உள்ள காளிகாம்பாள் தெருவில் இரவோடு, இரவாக சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றாமல் சாலை போட்டுள்ளனர்.

இந்த சாலைகள் மூன்று மாதங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த அவசர கதியில் இண்டு சக்கர வாகனங்கள் நிற்பது கூட தெரியாமல் சாலை போட்டுள்ளனர். தற்போது இந்த சாலையின் தரத்தின் மூலம் அரசின் தரம் தெரிந்து விட்டது. நிர்வாக குளறுபடிக்கு இதுவே சாட்சி. தற்போது தி.மு.க ஆட்சியின் சாயம் இதன் மூலம் வெளுத்து விட்டது. இன்னும் எத்தனை கூத்துகள் அரங்கேற உள்ளது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.