தற்போதைய செய்திகள்

குரூப்-4 கலந்தாய்வு ஒத்திவைப்பு – டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை:-

குரூப்-4 கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு -4 (தொகுதி -4ல் அடங்கிய பதவிகள்) 2018-2029 மற்றும் 2019- 2020-ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 20.03.2020 முதல் 31.03.2020 வரையும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிக்கு 02.04.2020 முதல் 07.04.2020 வரையும் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு தேசிய பேரிடரான அறிவிக்கை செய்துள்ளதாலும், தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க எடுத்துவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை கருத்திற்கொண்டும் மேற்படி நாட்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3 ஆகிய பதவிகளுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று தேதியானது பின்னர் அறிவிக்கப்படும்.மேலும் இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ மெயில் மூலமாக தனியே தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.