கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து கழக கவுன்சிலர் தலைமையில் மறியல்

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 32-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழக கவுன்சிலர் கவியரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் கடந்த ஆண்டு பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஆரம்பித்து விட்டு பின்பு அந்த சாலை பணிகள் தி.மு.க. நகராட்சி நிர்வாகத்தால் கைவிடப்பட்டன.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவுநீர் வாறுகால் உடைந்த நிலையில் சுகாதார சீர்கேடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் கட்டிடம் உடைந்து சீர் செய்யப்படாமல் உள்ளது.
இதுபோன்ற அடிப்படை வசதிகளை உடனே செய்து தரக்கோரி கடந்த நகர்மன்ற கூட்டத்தில் 31.03.2022 அன்று மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட 100 தீர்மானங்களில் 32-வது வார்டு மக்களின் ஒரு கோரிக்கை கூட நடைமுறைபடுத்தப் படக்கூடிய தீர்மானம் ஒன்று கூட இல்லாததால் 32-வது வார்டு நகர் மன்ற கழக உறுப்பினர் கவியரசன கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அவர் தலைமையில் பொதுமக்கள் நகராட்சியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.