தற்போதைய செய்திகள்

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.330 கோடியில் சுற்றுவழிச்சாலை திட்டம் – பேரவையில் முதலமைச்சர் தகவல்

சென்னை:-

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.330 கோடியில் சுற்றுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், கரூர் நகர சுற்றுவழிச்சாலை மற்றும் கரூர் புறநகர பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-

கரூர் நகர சுற்றுவழிச் சாலை பற்றி உறுப்பினர் பேசினார். ஏற்கனவே அந்த சாலை நேர்பாடு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மக்களிடம் இருந்து கோரிக்கை வந்த காரணத்தினாலே தான் மாற்றி அமைக்கப்பட்டது. முதலிலே அரசாணை 164-ன்படி நேர்பாட்டில் சுமார் 43.14 கிலோ மீட்டர் நீளச் சாலையாக இருந்தது. அது அரசாணை 7-ன்படி 30.968 கிலோ மீட்டர் நீளச்சாலையாக குறைக்கப்பட்டது.

ஏற்கனவே கரூர் நகரத்திலே போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் இந்த சாலை முதலில் நேர்பாடு செய்யப்பட்டது. பிறகு அதே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அந்த சாலையினுடைய நீளம் குறைக்கப்பட்டு, எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தோமோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அந்த சாலையினுடைய நீளம் குறைக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, இதற்காக 164 நேர்பாடு முதன்முதலில் எடுக்கப்பட்ட போது, 402 ஏக்கர் இதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. முதன்முதலாக நேர்பாடு எடுத்த பகுதி அத்தனையுமே விவசாய பூமியாக, வயல் பூமியாக இருக்கின்ற பகுதி. இரண்டாவது முறை நேர்பாடு எடுத்த பகுதி வறண்ட பகுதியாக இருக்கின்றது. ஆகவே இது ஒரு பிரச்சினை. அதுமட்டுமல்லாமல், இரண்டாவது முறையாக அரசாணை 7-ன்படி நேர்பாட்டை எடுக்கின்ற போது, கிட்டத்தட்ட 341.93 ஏக்கர் தான் கையகப்படுத்தினோம்.

கிட்டத்தட்ட 61 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய நிலம் மீதம் ஆகிறது. அதோடு அரசாணை 164-ன்படி நகரத்திலே சுற்றுச்சாலை அமைப்பதற்கு 330 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இப்பொழுது அதனுடைய நீளம் குறைக்கப்பட்ட காரணத்தினாலே 215 கோடி ரூபாயிலே இந்த திட்டம் நிறைவேற்ற முடியும். ஆக 115 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. ஆகவே தான், இந்த புறவழிச்சாலை அமைக்கின்ற நேர்பாட்டை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல நீதிமன்றத்திலே வழக்கு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதையும் உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே தெளிவாக தெரிவித்திருக்கிறேன். முதலில் நேர்பாடு செய்த பகுதி வயல்பகுதி. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடுவார்கள், ஆக இது மேடான பகுதி. அதுமட்டுமல்லாமல், நீங்கள் சொல்வதைப் போல நகரத்தில் இருக்கின்ற போக்குவரத்தை குறைப்பதற்கு தான் இந்த புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதன் அடிப்படையில் தான் அந்த நீளத்தை குறைத்து நகரத்திற்குள் செல்கின்ற அந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உரிய முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கரூர் நகரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க நிலத்தை தானமாக வழங்கியவர் தற்போது நிலத்தை தனக்கே திரும்ப வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தினால் இவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. நிலம் தொடர்பாக மேலும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தாமதம் ஆகி இருக்கிறது என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். தீர்ப்பு வந்த பிறகு அந்தப்பணி துவங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.