சிறப்பு செய்திகள்

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சிறுதுறைமுகங்கள் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பல்வேறு கேள்விகளை கேட்டார். அனைத்திற்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உடனுக்குடன் பதில் அளித்தார். தொடர்ந்து உறுப்பினர் தங்கம் தென்னரசு காவேரி-குண்டாறு இணைப்பு திட்டம் எப்படி நிறைவேற்ற போகிறீர்கள். மத்திய அரசு நிதியா, மாநில நிதியா? என்று கேட்டார்.

இந்த கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

காவேரி–-குண்டாறு திட்டம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றப்படும் திட்டமாகும். மத்திய அரசு நிதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றும். மாநில அரசு இதற்காக ரூ.800 கோடி முன்பணம் ஒதுக்கியிருக்கிறது. முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த அம்மா தான் ஆணையை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிகள் துவங்கப்பட்டது. 23 மரம் வெட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டது. கேரள அரசு அனுமதி தரவில்லை. அதிகாரி மீது வழக்கு போட்டார்கள். 152 அடியாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எந்த அணையை கட்டுவதாக இருந்தாலும், கீழே உள்ள மாநிலத்தின் அனுமதியை கேட்டு தான் கட்ட வேண்டும். நம் மாநிலத்தில் நதி உற்பத்தி குறைவு. கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் நதி நீர் உற்பத்தி அதிகம். கேரள அரசுடன் நாம் சந்தித்து, பேசியிருக்கிறோம். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பற்றியும் பேசியிருக்கிறோம். இரு மாநில அரசுகளும் நதிநீர் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்குள்ள முதலமைச்சரும் நல்ல முதலமைச்சர். நீண்டகால பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.