தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி – சட்டப்பேரவையில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ கோரிக்கை

சென்னை

ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ பேசினார்.

சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்ற அவைக்குழுத் தலைவர் கே.எஸ்.தென்னரசு பேசியதாவது:-

ஈரோடு மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ஊராட்சி கோட்ட குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 485 கோடியில் திட்டத்தை விரைவில் தன்னுடைய திருக்கரத்தால் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க இருக்கின்ற முதல்வருக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் கனி மார்க்கெட்டில் மிகச் சிறந்த வணிக வளாகம் அமைத்துக்கொடுத்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு பெருந்துறை ரோட்டில் காளிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை உள்ள 5 கி.மீ. மேம்பாலத்தை விரைவில் கால்கோள் விழா நடத்த முதல்வரை அன்புடன் வேண்டுகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் உரிமை காத்த தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஒரு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை விரைவாக அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வகுப்பறை கட்டி கொடுப்பதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சி மூலம் தினசரி 220 டன் மக்கும் குப்பை மக்காத குப்பை சேருகிறது. இதுமட்டுமல்லாமல் காவேரி கரையில் நீண்டகாலமாக கொட்டி வைக்கப்பட்டு, காவேரி ஆற்றை மாசுப்படுத்திய குப்பைகள் எல்லாம் உரமாக்கி விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 15 டன் விலையில்லாமல் உரம் வழங்கப்படுகிறது. காவேரி மாசுபடுவதையும் தடுத்த முதலமைச்சருக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ பேசினார்.