தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி கப்பலூர் சுங்கசாவடியை அகற்றுங்கள்

முதலமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல்
மதுரை
வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கப்பலூர் சுங்கசாவடியை அகற்றுங்கள் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூர் சுங்க சாவடியை அகற்றப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் அமைச்சராக இருந்து பொழுது மக்களுக்காக பணியாற்றும் பொழுது அந்த சுங்க சாவடியை அகற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்ததை இந்த நேரத்தில் நான் சொல்ல கடமைபட்டுள்ளேன்
தற்போது அந்த கப்பலூர் சுங்க சாவடியில் பயன்படுத்தும் வாகன உரிமையாளருக்கு வழக்கறிஞர்கள் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு வாகன நம்பருடன் தனி தனியாக அனுப்பப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை எத்தனை முறை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது முழுக்க, முழுக்க குழப்பமான சூழ்நிலை. ஏற்கனவே அகற்றப்பட வேண்டும் என்று ஒரு புறத்தில் மக்கள் போராடி வருகிறார்கள். தற்போது இந்த நோட்டீஸ் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் நீங்கள் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது மக்களுக்கு வேதனையையும், மனஉளைச்சலும் அளித்திருக்கிறது. இது குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, மக்களிடத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இந்த நோட்டீஸ் அமைந்து இருக்கிறது.
இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது திருமங்கலம் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அந்த வாக்குறுதி அடிப்படையில் இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். மக்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று நான் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.