தற்போதைய செய்திகள்

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர முதல்வர் துரித நடவடிக்கை – பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை

ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர முதலமைச்சர் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் எழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 596 மீனவர்கள் உட்பட 712 மீனவர்கள் ஈரான் நாட்டில் இருக்கிறார்கள். நாகை மீனவர்களும் அங்கே இருக்கிறார்கள். உணவு ஏதுமின்றி தவிக்கிறார்கள். இதேபோன்று தமிழ்நாட்டை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களும் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் அங்கு இருக்கிறார்கள். எனவே இவர்களை மீட்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதே கருத்தை பிரின்ஸ் (காங்கிரஸ்), முகமது அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி) ஆகியோரும் வலியுறுத்தினார்கள்.

இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து பேசியதாவது:-

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கிறது. அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர முதலமைச்சர் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும், காலையிலும், மாலையிலும் நிலைமைகளை கேட்டு வருகிறார்.

அங்கு தவிப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.கடந்த 15 ந்தேதி அன்று தமிழக அரசு அதிகாரிகளும், வெளிநாட்டு தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கோலாலம்பூரிலிருந்து 170 மாணவர்கள் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் எடுத்த போர்க்கால துரித நடவடிக்கையால் தான் இது நடைபெற்று இருக்கிறது.

இன்று முதலமைச்சரின் உத்தரவின்பேரில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக எம்.பி.க்களும் வெளியுறவு துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஈரானில் தவிக்கும் மீனவர்களையும், பிலிப்பைன்சில் உள்ள மாணவர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உலகத்திற்கு வழிகாட்டும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட எல்லைகளில் 82 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலமைச்சர் இரவு பகலாக இதில் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காலையில் துறைவாரியாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டு வருகிறார். யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார்.