தற்போதைய செய்திகள்

உணவுப்பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் – அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

சென்னை

உணவுப்பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதத்துடன் கூறினார்.

சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்து பேசியதாவது:-

நீண்ட நெடிய வருடங்களாக சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் பல பேர் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றித் தரவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அது முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன், சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்ற அரிய வாய்ப்பினை உத்தரவாக வழங்கினார்.

இதன்படி 4 லட்சத்து 51 ஆயிரத்து 614 குடும்ப அட்டைதாரர்கள், தங்களது சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொண்டு விலையில்லா அரிசி பெற்று மனம் நிறைவுடன் இருக்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ஆகும் கூடுதல் செலவு 304 கோடியே 56 லட்சம் ரூபாய் ஆகும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டாலும், அம்மா அவர்களின் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

காவிரியில் தமிழகத்திற்குரிய உரிமையை சட்டப் போராட்டம் மூலம் மீட்டெடுத்து அதை அரசிதழில் வெளியிடச் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதற்காக அம்மா அவர்களுக்கு அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து காவிரி ரெங்கநாதன் தலைமையில் தஞ்சாவூரில் 9.3.2013 அன்று நன்றி பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் தான் அம்மா அவர்களுக்கு பொன்னியின் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களால் அன்றாடம் அச்சப்பட்டு கொண்டிருந்த மக்களைப் பார்த்து இனி அச்சப்பட தேவையில்லை என்று உறுதி கூறி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, காவிரி பாசனப்பகுதி மக்களின் வயிற்றில், பால் வார்த்த முதலமைச்சர் எடப்பாடியார்.

தங்கள் வாழ்வாதாரத்தை காத்தவருக்கு அம்மா அவர்களுக்கு எடுத்தது போல ஒரு நன்றி பாராட்டு விழா எடுத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் ஒன்று திரண்டு 7.3.2020 அன்று, திருவாரூரில் காவிரி ரெங்கநாதனின் தலைமையில் எழுச்சிமிகு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் பேசிய காவிரி ரங்கநாதன், “நம்முடைய முதலமைச்சர் ஒரு செயல் வீரர்”, என்று குறிப்பிட்டதோடு, “அம்மா அவர்கள் காவிரிக்கு சட்டப் பாதுகாப்புக் கொடுத்தார். இன்றைய முதலமைச்சர் எடப்பாடியார் நமக்கு ஒரு சட்டத்தையே கொடுத்திருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசிய அவர்,“நானும் மற்ற விவசாய சங்கத் தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசித்து, அம்மா அவர்களைப் பாராட்டி பட்டம் கொடுத்ததுபோல, பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் காலத்திற்கும் டெல்டா பகுதியில் விவசாயம் பொய்த்துப் போகாமல் எங்களைப் பாதுகாத்த இன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி பாராட்டும் வகையில், அவருக்கு “காவிரி காப்பாளர்” என்ற பட்டம் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்” என்று முடிவெடுத்ததாகக் கூறி, பெரியவர் காவிரி ரெங்கநாதனும் மற்ற விவசாய சங்கத் தலைவர்களும் ஒன்றாக இணைந்து நின்று “காவிரி காப்பாளர்” என்ற பட்டத்தை நம்முடைய முதலமைச்சருக்கு வழங்கினார்கள்.

மேலும் இந்தச் சாதனையை நினைவு கூர்ந்திடும் வகையில், கல்லணையில் வளைவு ஒன்றை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் தமிழக அரசுக்கு வைத்தார்கள். அதனை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

முதலமைச்சர் எடப்பாடியாருக்கு, “காவிரி காப்பாளர்” என்ற பட்டத்தை வழங்கிய நேரத்தில், அன்று காலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் எண்ணிப் பார்த்தேன். திருச்சியிலிருந்து திருவாரூருக்கு வருகின்ற வழி நெடுகிலும் நம்முடைய முதலமைச்சர் விவசாயப் பணிகளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார். சாலையின் இருமருங்கும் நாற்று நடவுப் பணிகள் தொடர்ச்சியாக நடப்பதை பார்த்துக்கொண்டே வந்த முதலமைச்சர், அம்மாப் பேட்டைக்கும் நீடாமங்கலத்திற்கும் இடையே வரும்போது ஒரு இடத்தில் திடீரென காரை நிறுத்தச்சொன்னார்.

கார் நின்றதும் கீழே இறங்கிய முதலமைச்சர் எங்களுக்கெல்லாம் முன்னதாக சேறும், சகதியுமாக இருந்த வரப்புகளின்மேல் நடந்து வயல்வெளியில் நடவுப்பணி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஆண்களும், பெண்களும் வந்திருப்பவர் யார் என்பதை உணர்ந்து ஒரு கணம் திகைத்து, பின் ஓடோடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். முதலமைச்சரும் அன்பு பொங்க நலம் விசாரித்து அவர்களிடம் விவசாயப் பணிகள் குறித்து ஒவ்வொன்றாக கேட்டார். அப்போது அங்கிருந்த அந்த நிலத்தின் உரிமையாளர் முதல்வரிடம் வந்து, “அய்யா தங்கள் கரங்களால் முதல் நாற்றை நட்டு நடவுப் பணியைத் தொடங்கி வைக்க வேண்டும்” என்று கேட்டார்.

விவசாயிகள் சாகுபடிக் காலத்தின் தொடக்கத்தில் தங்களது வயலில் நாற்று நடும்போது விளைச்சல் நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக, தங்களது குடும்பத்திலுள்ள ராசியானவரையோ, அல்லது அந்த கிராமத்திலுள்ள ராசியான ஒருவரையோ முதலில் நடவு செய்ய சொல்வது வழக்கம். இதை கிராமப்புறங்களில் விவசாயிகள், “ பொன் நடவு ” என்று கூறுவார்கள் இதைத்தான் அந்த விவசாயி முதல்வர் அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டார். முதலமைச்சரும் ஆர்வத்தோடு வயலில் இறங்கி நாற்று நடும் பெண்களோடு சேர்ந்து தானும் நாற்று நட ஆரம்பித்தார்.

முதலமைச்சர் இரண்டிரண்டு நாற்றுக்களைப் பிரித்து அழகாய் சேற்றில் நடுவதைப் பார்த்த அங்கிருந்த நாற்று நடும் பெண்களே வியந்து போனார்கள். அப்போது அந்த நிலத்தின் உரிமையாளர் மனம் நெகிழ்ந்துபோய் முதலமைச்சரை கும்பிட்ட கரங்களோடு பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது கரங்கள் லேசாக நடுங்கியது, கண்கள் கலங்கியது. அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நின்று கொண்டிருந்தார்.அந்த உணர்ச்சி வேகத்தில் அவர் சொன்னார்- “அய்யா நீங்கள் ராசியானவர். இனி என் நிலம் மட்டுமல்ல, இந்த நாடே விவசாயத்தில் செழிக்கும் ” என்று குரலை உயர்த்தி சொன்னார். அதைத்தான் அந்த மேடையில் நான் எண்ணிப் பார்த்தேன்.

நேற்றைய தினம் முதலமைச்சர் தனது மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது, முதலமைச்சராக காரில் செல்வதைவிட, விவசாயியாக மாட்டு வண்டியில் சென்றது தான் எனக்கு மகிழ்ச்சி” என்றும், முதலமைச்சராக இருந்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக ஆக்கும் சட்ட முன்வடிவை, இந்த அவையில் தாக்கல் செய்ததுதான் என் பாக்கியம் என்றும் சொல்லி அகமகிழ்ந்தார்கள். முதலமைச்சரே ஒரு விவசாயியை முதல்வராக பெற்றது தான், காவிரி டெல்டாவில் பிறந்த எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் பெரும்பாக்கியம்/

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் எடப்பாடியார் வழிகாட்டுதலில், உணவுத் துறை தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கின்ற நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களால் மத்திய அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1.10.2002-முதல் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பகுதி மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு 2029 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 18 லட்சத்து 38 ஆயிரத்து 262 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் 15 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது E-Proucurement System மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை 3,476 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது, இதில் தமிழக அரசு வழங்கிய ஊக்கத்தொகை 116 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 133 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்/

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ஏனைய நுகர்வோர் விழிப்புணர்வு பெறவும், தரமற்ற பொருட்கள் மற்றும் நேர்மையற்ற வணிகத்தின் மூலமாக பாதிப்பு நேராமல், உரிய பாதுகாப்பு வழங்கிடவும் அம்மா அவர்களின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. 2011 முதல் பிப்ரவரி 2020 வரை 8 லட்சத்து 31 ஆயிரத்து 598 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 288 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டள்ளது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம்.

அம்மா அவர்கள் மக்களுக்கு சேரக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க உத்தரவிட்டார். அம்மா வழியில் நமது முதல்வர் எடப்பாடியார் கடத்தலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தொடர்ந்து ஆணையிட்டு வருகிறார்கள். 2011 முதல் இதுவரை 70,999 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 48,536 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 1,122 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் விலை எவ்வளவோ, அதே அளவிற்கு தண்டத் தொகை வசூலிக்கும் முறை அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக உணவுப்பொருள் கடத்தல் என்பது “அதிக வருவாய், குறைந்த ஆபத்து” என்றிருந்த நிலை முற்றிலுமாக மாறி, “அதிக ஆபத்து குறைந்த வருவாய்” என்ற நிலை ஏற்பட்டதால், கடத்தல் முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்ததோடு, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாட்டைப் பின்பற்றி செயல்பட வேண்டுமென்று மற்ற மாநிலங்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியிருக்கிறது.

2011 வரை 12.41 லட்சம் மெ.டன் ஆக இருந்த கிடங்குகளின் கொள்ளளவை, கடந்த 9 ஆண்டுகளில் 22.25 லட்சம் மெ.டன்னாக உயர்த்தியது அம்மாவின் அரசு. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 1,139 கோடி ரூபாய். இதேபோல், சைலோ சேமிப்புகலன்கள், நியாயவிலை அங்காடிகள், நெல் கொள்முதல் கட்டிடங்கள், உலர் கலங்கள், அலுவலக கட்டிடங்கள் இவைகளுக்காக 400.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவுற்றும், நடைபெற்றும் வருகின்றன.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் – என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு, மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை, மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது.

முதலமைச்சர் மாட்டு வண்டி ஏறி லாவகமாக கயிறு பிடித்த விதமும்,வேட்டிய மடிச்சுக் கட்டி சேற்றில் நடந்த அழகும், வயலில் இறங்கி, விவசாய பெருமக்களோடு நாற்று நட்ட பாங்கும், அப்பப்பா. என்றைக்குமே நம்மை விமர்சிக்கும் கொள்கை கொண்ட எதிர்கட்சியை சேர்ந்தவர்களும், உங்கள் முதல்வர் எங்களையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார் என்று மனதாரப் பேசியதை காதாரக் கேட்க முடிந்தது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.