தற்போதைய செய்திகள்

கொரோனா வைரசுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற நடவடிக்கை – பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

சென்னை

கொரோனா வைரசுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற நடவடிக்கை என்று பேரவையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி கொரோனா வைரசின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்று துணை கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயது மதிக்கதக்கவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூட்டு மருந்து சிகிச்சையால் அவர் குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். டெல்லியில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க வட இந்தியர் ஒருவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவருடன் தொடர்பு வைத்திருந்த 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி, கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யும் ஆய்வு கூடங்கள் துவக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையிலும் பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே? என்றார்.

இதற்க அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு மத்திய அரசின் ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்க வில்லை. இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்கு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்ற நிறுவனம் மட்டுமே செய்து வந்தது. அதற்கு பின்பு தமிழகத்தில் உள்ள கிங்ஸ் ஆய்வகம் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.

அதேபோல தேனி, திருநெல்வேலி, ராஜீவ்காந்தி மருத்துவமனை போன்ற இடங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. ஐசிஎம்ஆர் அனுமதி இல்லாமல் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ள முடியாது. சிறப்பான வசதி கொண்ட தனியார் மருத்துவமனைகள் இத்தகைய ஆய்வகங்களை துவங்க வேண்டும் என்றால், ஐசிஎம்ஆர் அனுமதியை தமிழக அரசு பெற்று தரும். தனியார் மருத்துவமனைகளிலும் தனியாக வார்டுகள் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனி வார்டுகள் சிறப்பான வசதியுடன் மூன்றடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சை பெறுபவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.