ராமநாதபுரம்

கழகத்தை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைப்பார்-ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி திட்டவட்டம்

ராமநாதபுரம்

வரும் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பு ஏற்பார். கழகத்தை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைப்பார் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி திட்டவட்டமாக கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றிய கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஏற்பாட்டில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கே.சி.ஆணிமுத்து தலைமையில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆசை ராமநாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். திருவாடானை நகர செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து செல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கழகத்தின் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து திருவாடனை ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பேசினர்

அதனை தொடர்ந்து ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

தி.மு.க என்பது தீயசக்தி. அதை நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித்தலைவர் கூறினார். அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தி.மு.க.வை கடுமையாக எதிர்த்தார். அது மட்டும் அல்ல, நம் இயக்கத்தை எப்படியாவது அழித்து விடலாம் என்று தி.மு.க தொடர்ந்து பல காலகட்டங்களில் சூழ்ச்சி செய்தது. அதையெல்லாம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தகர்த்து எறிந்தார்.

இந்த இயக்கத்தில் சாதி, மதம் கிடையாது. ஆனால் சாதி, மதம் பெயரால் இந்த இயக்கத்தை யாரும் அழித்து விட முடியாது. இன்றைக்கு அனைத்து சாதி மக்களும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக எடப்பாடியார் உள்ளார். அது மட்டுமல்ல. கடைக்கோடியில் இருக்கும் இந்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை எடப்பாடியார் வழங்கி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கழக தொண்டர்கள் முதல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். அந்த ஒற்றை தலைமையை எடப்பாடியார் பொறுப்பேற்க வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் தொண்டர்கள் தீர்ப்பை இறுதியான தீர்ப்பு என்பதை போல் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் அருளாசியுடன் வருகின்ற 11-ம்தேதி நடைபெறும் பொதுக் குழுவில் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பு ஏற்பார். அதனை தொடர்ந்து இயக்கத்தை சிறந்த முறையில் வழிநடத்தி அம்மாவின் கனவை நனவாக்கும் வகையில் மீண்டும் இந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தில் அமர வைப்பார்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.