தற்போதைய செய்திகள்

அம்மா உணவகத்தை செயல்படுத்துவதில் தி.மு.க. அரசு அக்கறை செலுத்தவில்லை -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை செயல்படுத்துவதில் தி.மு.க. அரசு அக்கறை செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டிஉள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவ, மாணவிகளின் பசிப்பிணியை போக்கினார். அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்கி மகத்தான சாதனை படைத்தார்.

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கிடும் வண்ணம் 19.2.2013 அன்று சென்னையில் அம்மா உணவகத்தை தொடங்கினார். தமிழக முழுவதும் 700 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

இதில் நான் வரும் 12 லட்சம் மக்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா காலகட்டங்களில் மக்களின் அட்சய பாத்திரமாக அம்மா உணவகம் இருந்தது. இதனை தொடர்ந்து அம்மா உணவகம் திட்டத்தை ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா போன்ற மாநிலங்கள் பின்பற்றின.

மதுரையில் 12 அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதில் குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார். வறுமை நிலையில் மருத்துவத்திற்கு கூட கட்டணம் செலுத்த முடியாத மக்கள் இந்த அம்மா உணவகத்தால் மிகவும் பயன் அடைந்து வந்தனர்.

ஆனால் தற்போது அம்மா உணவகம் இயங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. தி.மு.க. அரசின் செயல்பாட்டால் கவலை அளிக்கிறது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளன.

அவர்கள் குறைந்த விலைக்கு எத்தனை நாட்களுக்கு வழங்க முடியும். தனியார் லாப நோக்கத்தில் தான் செயல்படும்.
ஆனால் அம்மா உணவகம் சேவை மனப்பான்மையோடு லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்காக தொடங்கப்பட்டது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.